மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்!!
(நூருல் ஹுதா உமர்)
சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம். அன்ஷிப் என்ற மாணவன், மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
மாகாண மட்டப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்ற மாணவனைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது, மாணவனின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் வழிகாட்டி உழைத்த ஆசிரியர்களும் பாடசாலை சமூகத்தினரால் நன்றியுடனும் பெருமையுடனும் பாராட்டப்பட்டனர்.
மாணவன் எம்.என்.எம். அன்ஷிபை இப்போட்டிக்காக வழிப்படுத்திய ஆசிரியைகளான திருமதி ஏ. ரிதா பிரீதி மற்றும் திருமதி ஏ.யு. சபீனா ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும் இதன்போது பாராட்டப்பட்டது.
மாணவனை கௌரவிக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ.ஜௌபர், பிரதி அதிபர் திருமதி ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், பகுதித் தலைவர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் இந்த மாணவர் பங்குபற்றவுள்ளார். மேலும், இம்மாணவன் கணித ஒலிம்பியாட் பரீட்சையிலும் மாகாண மட்டத்திற்குத் தெரிவாகி, தேசிய மட்டப் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவனின் இவ்வெற்றி பாடசாலைக்கும் சாய்ந்தமருது கல்விச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், தேசிய மட்டப் போட்டியிலும் சிறப்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாடசாலை சமூகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
No comments