Column Left

Vettri

Breaking News

யாழ். சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கலந்துரையாடல்!




( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் முப்பதாம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று காரைதீவில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நடைபெற்ற அந்த கலந்துரையாடலில் யாழ்.பயணம் பற்றி பூரண விளக்கமளித்தார். காரைதீவு பிரதேச சபையின் நூலக மேல் மாடியில் நேற்று முன்தினம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரன், முன்னாள் தவிசாளர் கே. ஜெயசிறில், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், சங்க ஆலோசகர் ரி.பிரதீபன் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்வரும் 30ஆம் தேதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினம் . அன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இடம்பெற இருக்கின்றது. வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் இருந்தும் அங்கு பலாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூட இருக்கின்றார்கள். இங்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் 600 தாய்மார்கள் இறந்தமை வரலாற்று நூல் வெளியிடப்பட இருக்கிறது .மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பாவித்த அரிய பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படவிருக்கிறது . எனவே அதற்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து பல தரப்பினரையும் இந்த சர்வதேச மாநாட்டுக்காக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக பலரது உதவியையும் நாடி நிற்கிறோம் என்றார்.

No comments

Subscribe Us