Column Left

Vettri

Breaking News

வீரமுனைக் கிராமத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய உறவினர்கள்!!




(பாறுக் ஷிஹான்) அம்பாறை – வீரமுனைக் கிராமத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 232 அப்பாவித் தமிழ் மக்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வீரமுனை நினைவுத் தூபியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வின்போது அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கடந்த அசாதாரண யுத்த சூழ்நிலை காரணமாக, சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்களினால் அஞ்சிய வீரமுனை மற்றும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புத் தேடி வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை வளாகத்திலும் தஞ்சம் புகுந்திருந்தனர். அவ்வாறு தஞ்சம் புகுந்திருந்த வேளையில், கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி புகுந்த ஆயுததாரிகளால் 232 பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் இடம்பெற்று 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அக்கிராம மக்களும் உறவினர்களும் ஒன்றிணைந்து இவ்வாறான நினைவேந்தல் வழிபாடுகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us