Column Left

Vettri

Breaking News

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு சிங்களத் திரைப்படம் உருவாக்கப் நடவடிக்கை! கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு; உள்ளூர் மக்களும் பங்கேற்பு!!




(பாறுக் ஷிஹான்) சர்ச்சைக்குரிய வகையில் கைதாகிப் பின்னர் விடுவிக்கப்பட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் புதிய சிங்களத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தின் முக்கிய கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை (12) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, வைத்தியர் ஷாபி கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. வைத்தியர் ஷாபி சவால்கள் நிறைந்த நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டபோது, பாதுகாப்பான சூழலைத் தேடி கல்முனைப் பகுதியில் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது வாழ்க்கைப் பயணத்தில் கல்முனை நகரம் ஒரு முக்கிய அடைக்கலப் பகுதியாக விளங்கியதன் காரணமாகவே, திரைப்படக் குழுவினர் அத்தியாவசியக் காட்சிகளை கல்முனையில் படமாக்கி வருகின்றனர். அந்நாட்களில் துன்பத்தில் இருந்த அவருக்குக் கல்முனைப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஆறுதலும், நம்பிக்கையும், மனபலமும் அளிப்பது போன்ற காட்சிகள் உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை முழு உலகிற்கும் நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுத்துரைக்கும் ஒரு படைப்பாக இத்திரைப்படம் உருவாகி வருவதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

No comments

Subscribe Us