மாணவர்களின் சிந்தனையை வடிவமைக்கும் கல்வியாளர்களாக விரிவுரையாளர்கள் மாற வேண்டும் – தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜுனைடீன்!!
நூருல் ஹுதா உமர்
“இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் அறிவைப் பெறுவதற்கு ஆசிரியர்களை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. எனவே கல்வியாளர்களின் பணி தகவல்களை வழங்குவதோடு மட்டுப்படாமல், மாணவர்களின் சிந்தனைத்திறன், ஆய்வுத்திறன், புத்தாக்க ஆற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வழிகாட்டிகளாக அவர்கள் திகழ வேண்டும்” என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையம் ஏற்பாடு செய்திருந்த 2026 ஆம் ஆண்டுக்கான புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட கல்விசார் பணியாளர்களுக்கான அறிமுக வழிகாட்டல் பயிற்சி (Induction Programme) நிகழ்வு மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்ப அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய உபவேந்தர், உயர்கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கல்வியாளர்கள் அறிவை உருவாக்குதல், அதனை மாணவர்களிடம் பரப்புதல் மற்றும் சமூகத்திற்குச் சேவையாற்றுதல் ஆகிய அடிப்படைப் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், தொழில்முறை ஒழுக்கம், சுயாதீன சிந்தனை, நேர்மை மற்றும் கல்விசார் பொறுப்புணர்வு ஆகிய பண்புகள் ஒரு சிறந்த கல்வியாளரின் அடையாளங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய உபவேந்தர், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகிய துறைகளில் பல்கலைக்கழகம் புதிய முன்னேற்றங்களை நோக்கி பயணித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த வளர்ச்சிப் பயணத்தில் புதிதாக இணையும் கல்விசார் பணியாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பணியாளர் மேம்பாட்டு நிலையப் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். நிஜாம் வரவேற்புரையாற்றினார். புதிய கல்வியாளர்களின் தொழில்முறை வளர்ச்சி, கற்பித்தல் திறன், ஆராய்ச்சி ஆற்றல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.எச். நபார் நிகழ்வை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸில், தொழில்நுட்பவியல் பீடாதிபதி ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர், பதிவாளர் எம்.ஐ. நௌபர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட கல்விசார் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
புதிய கல்விசார் பணியாளர்களை உயர்கல்வித் துறையின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அறிமுக வழிகாட்டல் பயிற்சித் திட்டம், அவர்களின் தொழில்முறை முன்னேற்றத்திற்கான முக்கிய ஆரம்ப கட்டமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
umarhutha@gmail.com
abukinza4@gmail.com
No comments