சும்மா இருக்கும் மனங்கள் சாத்தானின் தொழிற்சாலைகளாக மாறுகின்றன" : இளைஞர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது காலத்தின் தேவை – எஸ்.எம். சபீஸ்!!
நூருல் ஹுதா உமர்
இளைஞர்களின் மனங்களை ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் சமூகப் பொறுப்புணர்வுள்ள நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபடுத்துவது இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய தேவையாகும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்துரையில், "சும்மா இருக்கும் மனங்கள் சாத்தானின் தொழிற்சாலைகளாக மாறுகின்றன" என்ற பழமொழி இன்றைய சமூகச் சூழலில் மிகவும் பொருத்தமானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இளைஞர் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
குறிப்பாக போதைப்பொருள் பாவனை, வன்முறை கலாசாரம், இணைய வழி தவறான தாக்கங்கள், ஒழுக்கச் சீரழிவுகள் மற்றும் சமூகப் பொறுப்பின்மை போன்ற விடயங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இளைஞர்களின் ஆற்றல்களை நேர்மறையான பாதையில் வழிநடத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு இளைஞனின் மனம் வெறுமையாக இருக்கும் போது அதனை தவறான சிந்தனைகள் ஆக்கிரமிக்கும் அபாயம் அதிகரிப்பதாகவும், அதனால் கல்வி, மார்க்கம், விளையாட்டு, சமூக சேவை, கலை, கலாசாரம் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகள் போன்ற துறைகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் ஆற்றல்களை சமூக நன்மைக்காக பயன்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ரமழான் காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட Islamic Life Studies பயிற்சித் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மாணவர்களை போதைப்பொருள் உள்ளிட்ட சமூகச் சீரழிவுகளிலிருந்து பாதுகாத்து, மார்க்க விழுமியங்கள் மற்றும் ஒழுக்க நெறிகளுடன் வாழ வழிகாட்டும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இளைஞர்களை குற்றச்செயல்களில் இருந்து விலக்கி நல்லொழுக்கம், கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் பாதையில் வழிநடத்துவதற்கு குடும்பம், பாடசாலை, மார்க்க நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சமூகத்தின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது என்பதால், அவர்களின் சிந்தனைகளை கட்டியெழுப்பும் முதலீடுகளே உண்மையான சமூக முதலீடுகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களின் நேரத்தையும் திறமைகளையும் பயனுள்ள செயற்பாடுகளுக்குத் திருப்புவதன் மூலம் போதைப்பொருள், வன்முறை மற்றும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த முடியும் என்றும், அதற்காக தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"இளைஞர்களின் மனங்களை வெறுமையாக விடாமல் அறிவு, ஒழுக்கம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வால் நிரப்பினால் மட்டுமே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்" என எஸ்.எம். சபீஸ் தனது கருத்துரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments