கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினைக்கு தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தீர்வு காண வேண்டும் : ஐக்கிய மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் தி. யோகநாயகன் வலியுறுத்தல்!!
கல்முனை தமிழ் (கல்முனை வடக்கு) பிரதேச செயலகப் பிரச்சினைக்கு அரசியல் மோதல்களுக்கு அப்பால் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நேரடியாக கலந்துரையாடி நிலையான தீர்வை எட்ட வேண்டும் என ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபக செயலாளர் நாயகமும் நாவிதன்வெளி முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான தி. யோகநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்முனை தமிழ் (கல்முனை வடக்கு) பிரதேச செயலக விவகாரம் கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் முக்கியமான நிர்வாக, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் வெறும் நிர்வாக சேவைகள் அல்லது எல்லை வரையறைகளுடன் தொடர்புடையதாக மட்டுமன்றி, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள், அடையாளங்கள், பாதுகாப்பு உணர்வு மற்றும் எதிர்கால இணைவாழ்வுடனும் தொடர்புபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த விவகாரம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு இதுவரை எட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கான தீர்வு அரசியல் மேடைகளில் இடம்பெறும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்ப்புகளின் மூலம் உருவாகாது என்றும், மாறாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் உண்மையான சமூகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடுவதன் மூலமே பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வு உருவாக்கப்பட முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நூற்றாண்டுகளாக அயலவர்களாகவும், நண்பர்களாகவும், வணிகப் பங்காளிகளாகவும் வாழ்ந்து வந்துள்ள நிலையில், அந்த வரலாற்று உறவை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பாதிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளும் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டியது போலவே, முஸ்லிம் சமூகத்தினரின் அச்சங்கள் மற்றும் கவலைகளும் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றும், ஒரு சமூகத்தின் நியாயமான கோரிக்கையை மற்றொரு சமூகத்திற்கு எதிரானதாக சித்தரிப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒரே பிராந்தியத்தில் இணைந்து வாழ வேண்டியவர்கள் என்பதால், நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருள் அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடி மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் போன்ற முக்கிய சவால்கள் சமூகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், சமூகங்களுக்கிடையே மேலும் பிளவுகளை உருவாக்குவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக, கோவில் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரிகள், பெண்கள் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டு சமூக கலந்துரையாடல் பேரவையொன்றை உருவாக்குமாறும் அவர் முன்மொழிந்துள்ளார்.
இந்த பேரவை அரசியல் கட்சிகளின் செல்வாக்கிற்கு அப்பால் மக்கள் நலன் மற்றும் பிராந்திய அமைதியை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு, அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினையை தேர்தல் அரசியலுக்கான கருவியாக பயன்படுத்துவதை அனைத்து அரசியல் தரப்பினரும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள தி. யோகநாயகன், மக்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் தேடுவதை விட சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், இரு சமூகங்களின் கண்ணியமும் மதிக்கப்பட வேண்டும் என்பதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு உண்மையான மற்றும் நிலையான தீர்வு கிடைக்கும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments