Column Left

Vettri

Breaking News

க.பொ.த (சா/த) 2025 பெறுபேறுகள்: அக்கரைப்பற்று, கல்முனை கல்வி வலயங்கள் தேசிய மட்டத்தில் 2ஆம். 3ஆம் இடம் பெற்று சாதனை!!




நூருல் ஹுதா உமர் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதலாம் முயற்சி பெறுபேறுகளின் அடிப்படையில், நாட்டின் கல்வி வலயங்களுக்கிடையிலான தரவரிசையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் பெருமையை உயர்த்தியுள்ளது. பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோற்றிய 1,727 மாணவர்களில் 1,475 பேர் உயர்தரக் கல்விக்குத் தகுதி பெற்று 85.41 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் அக்கரைப்பற்று கல்வி வலயம் தேசிய ரீதியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தேசிய தரவரிசையில் கண்டி கல்வி வலயம் 85.97 சதவீதத்துடன் முதலிடத்தையும், அக்கரைப்பற்று 85.41 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், கல்முனை கல்வி வலயம் 84.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. மேலும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 1,324 பேர் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில், தமிழ்/சிங்களம், ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளிட்ட மூன்று திறன்களுடன் சித்தி பெற்று 76.66 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், கல்முனை கல்வி வலயம் 3ஆம் இடத்தையும், திருக்கோவில் கல்வி வலயம் 4ஆம் இடத்தையும், மட்டக்களப்பு கல்வி வலயம் 11ஆம் இடத்தையும், சம்மாந்துறை கல்வி வலயம் 33ஆம் இடத்தையும், அம்பாறை கல்வி வலயம் 37ஆம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் பலனாக அக்கரைப்பற்று, கல்முனை கல்வி வலயங்கள் இந்த வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை கல்வி வலயங்கள் தேசிய தரவரிசையின் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பது கிழக்கு மாகாணத்தின் கல்வித் தரம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் முக்கியமான சான்றாகக் கருதப்படுகிறது. கல்விச் சமூகத்தினர் இந்த சாதனையை வரவேற்று, எதிர்கால ஆண்டுகளில் முதலிடத்தை நோக்கி பயணிக்கும் வகையில் கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

No comments