Column Left

Vettri

Breaking News

ஒன்லைன் முதலீட்டு மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை!!




நாற்பது வருடங்களுக்கு மேலாக அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளை வகித்து, ஓய்வுபெற்ற 70 வயதுடைய தொழில்முறை பொறியியலாளர் ஒருவர், வட்ஸ்அப் ஊடாக நடத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி சுமார் 90 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தனது வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளார். பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதால் கொழும்பிலுள்ள தனியார் முதியோர் இல்லமொன்றில் தங்கி வாழ்ந்து வந்த இவருக்கு, சொந்தமாக வீடொன்றும், 1 கோடி ரூபாவுக்கும் அதிகமான வங்கி வைப்புகளும் இருந்துள்ளன. இணைய வங்கிச் சேவைகள் மற்றும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களை நன்கு பயன்படுத்தத் தெரிந்த, உயர்கல்வி கற்ற தொழில்முறை நிபுணரே இந்த நுட்பமான இணைய மோசடி வலையில் வீழ்ந்துள்ளார். வங்கி வைப்புகளுக்கு சட்டபூர்வ நிதி நிறுவனங்கள் எவையுமே வழங்க முடியாத அளவிலான அதிக இலாபத்தை, அதாவது முதலீடு செய்யும் தொகை 3 மாதங்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை வழங்கி மோசடியாளர்கள் இவரை ஏமாற்றியுள்ளனர். ஆரம்பத்தில் முதலீட்டு வருமானம் கிடைப்பது போன்ற போலித் தோற்றத்தை உருவாக்கிய மோசடிக்காரர்கள், உண்மையில் அவர் முதலீடு செய்த பணத்திலிருந்தே ஒரு பகுதியை இலாபம் போல் எடுத்துக் காட்டியுள்ளனர். பின்னர் வருமானம் குறையத் தொடங்கியபோதும், அவர்களின் சாதுரியமான பேச்சை நம்பி, 90 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளார். இறுதியில், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து அவர் உதவி கோரி இலங்கை கணினி அவசரப் பிரிவு நிறுவனத்தை நாடியுள்ளார். அவர் கணினி அவசரப் பிரிவை அணுகிய அந்த நேரத்திலும் கூட, மோசடியாளர்கள் அவரது சொந்த வீட்டை விற்று, அந்தப் பணத்தையும் முதலீடு செய்யுமாறு அவரைத் தூண்டியமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணினி அவசரப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, அவரை மேலும் பணத்தை இழக்காமல் தடுத்துள்ளதுடன், அவரிடமிருந்த பணப் பரிவர்த்தனை ஆவணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தற்போது பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை கணினி அவசரப் பிரிவு பொதுமக்களுக்கு, குறிப்பாக ஓய்வுபெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. யதார்த்தமற்ற முறையில் குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதாகக் கூறும் இணையவழி முதலீட்டுத் திட்டங்களை நம்பி வாழ்நாள் சேமிப்பைப் பணயம் வைக்க வேண்டாம் என கோரியுள்ளது. மேலும், வயதான பெற்றோர்கள் மற்றும் தனிமையில் வாழும் உறவினர்கள் இத்தகைய நுட்பமான இணைய மோசடி கும்பல்களின் பிரதான இலக்காக மாறுவதால், அவர்கள் மேற்கொள்ளும் நிதி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

No comments