ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசை: அக்கரைப்பற்று – பனங்காடு வழியாக ஜூலை 4ஆம் தேதி ரதபவனி.!!
(செல்வி வினாயகமூர்த்தி)
ஜீவசித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது பவளவிழா குருபூசையை முன்னிட்டு, காரைதீவிலிருந்து அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசம் ஊடாக பனங்காடு வரை நடைபெறவுள்ள வெளியூர் ரதபவனிக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் த. கைலாயபிள்ளை தலைமையில், இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், ரதபவனிக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக ஆராயப்பட்டன.
அதன்படி, 2026 ஜூலை 4ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8.00 மணிக்கு, சுமார் 500 பக்த அடியார்களின் பங்கேற்புடன், அக்கரைப்பற்று மருதையடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ரதபவனி ஆரம்பமாகவுள்ளது.
ரதபவனி அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயம், ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயம், ஸ்ரீ சித்திவிநாயகர் மகாதேவஸ்தானம், ஸ்ரீ பெரிய தம்பிரான் ஆலயம், திருவள்ளுவர் வித்தியாலயம், விபுலானந்தா சிறுவர் இல்லம் உள்ளிட்ட பல இடங்களை தரிசித்து அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், பக்தர்களுக்கு காலை உணவும் வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயம், அன்னை சாரதா வித்தியாலயம், சாயி ஆலயம், ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயம், அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை, இந்து மாமன்றம் வழியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தை சென்றடையும்.
பின்னர் பிரதான வீதி வழியாக அக்கரைப்பற்று ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், பெருநாவலர் வித்தியாலயம், கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயம், கோளாவில் விநாயகர் வித்தியாலயம் வழியாக பனங்காடு ஸ்ரீ கேணிகரைப்பிள்ளையார் ஆலயம், பாசுபதேஸ்வரர் வித்தியாலயம், ஸ்ரீ பாசுபதேஸ்வரர் ஆலயங்களை தரிசிக்கும். அங்கு மதிய உணவு வழங்கப்பட்டு பக்தர்கள் இளைப்பாறுவர்.
பிற்பகலில் பனங்காடு ஸ்ரீ நாககாளியம்மன் ஆலயம், இத்தியடி பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ முருகன் ஆலயம், ஸ்ரீ சிந்தாமணி பிள்ளையார் ஆலயம், திருநாவுக்கரசு வித்தியாலயம் மற்றும் விவேகானந்தா வித்தியாலயம் வழியாக ரதபவனி நிறைவடைந்து, பிற்பகல் 4.00 மணியளவில் காரைதீவை நோக்கி ரதம் புறப்படவுள்ளது.
ரதபவனி செல்லும் பாதையில் எந்த மாற்றமும் இருக்காது என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. வழியெங்கும் குளிர்பானம், ஆகாரங்கள், அன்பளிப்புகள் அல்லது ஆலய அபிவிருத்திக்கான நன்கொடைகள் வழங்க விரும்பும் பக்தர்கள் 077 366 4282 என்ற தொலைபேசி இலக்கத்தையோ அல்லது அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத் தலைவர் த. கைலாயபிள்ளையையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஆலையடிவேம்பு பிரதேசம் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் சித்துவிளையாட்டுகள் மற்றும் அருள்செயல்களுடன் தொடர்புடைய வரலாற்றுப் பெருமை மிக்க இடமாகக் கருதப்படுவதால், ரதபவனி செல்லும் வீதிகளில் தோரணங்கள் அமைத்து, நிறைகும்ப மரியாதையுடன் சுவாமிகளை வரவேற்று அவரது அருளைப் பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments