முதலைக்குடா கிராமம் முதன்மையானது! மட்டு.மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி புகழாரம்!!
வி.ரி.சகாதேவராஜா
இந்த பிராந்தியத்திலே சிறந்த விளையாட்டு வீரர்களையும், ரசிகர்களையும் உருவாக்குவதில் முதலைக்குடா கிராமம் முதன்மையானது.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகத்தின் மைதான திறப்பு விழா நேற்று முன்தினம்(24) புதன்கிழமை கழகத் தலைவர் கோ.கலைராஜ் தலைமையிலே நடைபெற்ற போது அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ.திரேசகுமாரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் பேசியதாவது..
கடந்த 65 வருட காலமாக பிரதேச அபிவிருத்தி மற்றும் விளையாட்டு துறையில் விநாயகர் விளையாட்டு கழகம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் ஒரு மைதானம் இல்லாதது ஒரு குறையாக இருந்தது .
எனினும் பல பேரினுடைய முயற்சி அவர்களுடைய பங்களிப்பின் அடிப்படையிலே இன்று இந்த விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டுவது மகிழ்ச்சிக்குரியது.
இந்த விளையாட்டு மைதானத்திற்கு உத்தியோகபூர்வமாக இந்த காணியை கையளிப்பதிலே அன்றிருந்த பிரதேச செயலாளர் சிவப்பிரியாவின் பங்களிப்பு பாரியது.
அந்த வகையிலே பிரதேச செயலாளரையும் இந்த இடத்திலே நினைவுகூர்கிறேன். உண்மையாக முதலைக்குடா ஜூனியர் ஸ்கூலுக்கு கூட இந்த மைதானம் மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பல பாடசாலைகளை கொண்ட இந்த பிரதேசத்தில் இருந்து பல சாதனைவீரர்கள் இனங்காணப்படுகிறார்கள். அவர்களுடைய திறமைகள் மாவட்டத்திற்கும் எங்களுக்கும் பெயரை பெற்று தந்திருக்கிறது.
இந்த மைதான அமைப்பிற்கு பங்களித்த அரசியல்வாதிகள் தொடக்கம் சகலரையும் நன்றியோடு பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன்
என்றார்.
அவருக்கும் விளையாட்டு கழகத்திற்கு மைதான அமைப்பிற்கு உறுதுணையாக இருந்த பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
No comments