Column Left

Vettri

Breaking News

குரங்குகளின் ஆக்கிரமிப்பால் திணறும்  குமரன் ஆலயம்! பக்தர்கள் அச்சம், அவதி; இறந்துவரும் வேம்பு மரங்கள்!!  நடவடிக்கை எடுப்பார்களா? மக்கள் கேள்வி!




குரங்குகளின் ஆக்கிரமிப்பால் திணறும் குமரன் ஆலயம்! பக்தர்கள் அச்சம், அவதி; இறந்துவரும் வேம்பு மரங்கள்!! நடவடிக்கை எடுப்பார்களா? மக்கள் கேள்வி! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தமலை ஸ்ரீ முருகனாலயம் பகுதியில் மிதமிஞ்சிய குரங்குகளின் அதிகரித்த நடமாட்டம் காரணமாக பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வழமைக்கு மாறாக மிதமிஞ்சிய அளவில் குரங்குகள் திரண்டு காணப்படுவதால், தினமும் வழிபாட்டிற்காக வருகை தரும் பக்தர்கள் அச்சத்துடனும் சிரமத்துடனும் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பக்தர்கள் கொண்டு வரும் பூஜைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை குரங்குகள் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சிறுவர் மற்றும் முதியோர்களுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஆலய பூஜைக்காக மணி அடித்ததும் நூற்றுக்கணக்கான மந்தி மற்றும் சிறுவன் குரங்குகள் ஆலயத்தினுள் ஓடி வருகின்றன என்றும் பூஜைத்தட்டுடன் வெளியே செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையும் தோன்றியுள்ளது என ஆலய வண்ணக்கர் சுதா கூறுகிறார். மேலும் ஆலய வளாகத்தில் வனப்புடன் நிழலாக காணப்படும் வேம்பு மரங்களின் துளிர்கள் மற்றும் இளம் கிளைகளை குரங்குகள் தொடர்ந்து உண்பதால், பல மரங்கள் உலர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 15 வேம்பு மரங்கள் பட்டுப் போயுள்ளன. அவற்றில் 10 மரங்களை ஆலய சம்பிரதாயம் கருதி பட்டமரங்கள் ஆலய வளாகத்தில் நிற்கக்கூடாது என்பதற்காக வனபரிபாலன இலாகா அனுமதியுடன் தறித்ததாக ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா தெரிவித்தார். இவ்வாறு பெறுமதியான வேம்பு மரங்கள் அழிந்து வருவது ஆலயத்தின் வனப்பும் இயற்கைச் சூழலும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி பாலஸ்தாபனம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து கதிர்காம பாத யாத்திரீகர்கள் வருகை தரவுள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தலையீடு செய்து குரங்குகளின் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments