17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை! சர்வதேசத்திடம் கோடீஸ்வரன் எம்.பி. கவலை!!
17 வருடங்கள் கடந்தும்
தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை!
சர்வதேசத்திடம் கோடீஸ்வரன் எம்.பி. கவலை!!
( வி.ரி.சகாதேவராஜா)
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், எங்களது தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. அது கிடைக்க வேண்டும், எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் இன்று சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி நிற்கின்றோம்.
இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை ஏற்றிவைத்த பின்னர் உரையாற்றிய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (13) புதன்கிழமை மாலை காரைதீவில்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரனின் ஏற்பாட்டில் பிரதேச சபைக்கு முன்பாக உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
முன்னதாக ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மௌன ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் தவிசாளர்களான இ.ரூபசாந்தன்( நாவிதன்வெளி) , ஏ.தர்மதாஸ( ஆலையடிவேம்பு) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளை செயலாளர் கதிர்.செல்வப்பிரகாஸ் கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளர் சட்டத்தரணி அ.நிதான்சன், சபை உறுப்பினர்களான வை.கோபிகாந்த், எஸ்.சிவகுமார் , சீனு, மற்றும் முன்னாள் கல்முனை மாநகரபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்..
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்து 17ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், எங்களது மனதிலிருந்து இந்த கவலைகள் வடுக்கள் மாறப்போவதில்லை.
தமிழினப் படுகொலையானது திட்டமிடப்பட்ட வகையிலே இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் பக்கத்துணையாகவும் நின்று செயற்படுத்தப்பட்டதை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை.
எந்த நோக்கத்திற்காக இந்த மக்கள் முள்ளிவாய்க்காலிலே உயிர் நீத்தார்களோ, அந்த நோக்கத்தை அடைகின்றவர்களாக, அந்த நோக்கத்தைப் பெறுகின்றவர்களாக நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம். லட்சக்கணக்கான மக்கள் இந்த மண்ணிலே வித்தாக இருக்கின்றார்கள்.
லட்சக்கணக்கான போராளிகள் இந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்றார்கள். அவர்களது எண்ணத்தையும் சிந்தனையும் சுமந்தவர்களாக நாங்கள் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
2009-ஆம் ஆண்டு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும், எங்களது அரசியல் ரீதியான முன்னெடுப்புகள், தமிழர்களின் உரிமையைச் சார்ந்து, தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுத்து நாங்கள் சர்வதேச நாடுகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் தொடர்ச்சியான அழுத்தங்களை - எங்களது விடிவு கிடைக்கும் வரை நாங்கள் அந்தத் தொடர்ச்சியான அழுத்தங்களை சர்வதேசத்திற்குக் கொடுத்து நிற்போம் என்கிற இந்த செய்தியையும் இந்த இடத்திலே கூறிக்கொண்டு, சர்வதேசத்திடம் நாங்கள் வேண்டி நிற்பது, மீண்டும் நாங்கள் வேண்டி நிற்பது, தமிழர்களுக்கான அந்த சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டும், தமிழர்கள் தமிழர்களை ஆள வேண்டும் என்கின்ற அந்த ஒரேயொரு தேவைப்பாட்டைத்தான் நாங்கள் சர்வதேசத்திடம் முன்வைக்கின்ற ஒரு கோரிக்கையாக இருக்கின்றது என்பதனை இந்த இடத்திலே தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் செயலாளர் கதிர்.செல்வபிரகாஸ் ஆகியோர் நினைவு கூர்ந்து கருத்துரைக்கையில்..
"மே 18, மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அந்த அடிப்படையில் எமது இனம் பேரினவாத சக்திகளால் அழிந்து, சிறியவர் தொடக்கம் பெரியவர் வரை அழிக்கப்பட்ட இந்த வாரமானது எங்களால் இன்றும் ஜீரணிக்க முடியாத ஒரு வாரமாகக் காணப்படுகின்றது.
அந்த அடிப்படையில், மறக்க முடியாத இந்த இனவழிப்பின் விடுதலையாக இனிவரும் காலத்தில் வடகிழக்கில் எங்களுடைய இனம் நிமிர்ந்து நிற்க வேண்டும். இதுதான் இந்த இனவழிப்பினால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடையும் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொண்டு, எங்களுடைய இலங்கைத் தமிழரசு கட்சி அஹிம்சை ரீதியான இந்த முன்னெடுப்பை எடுப்பதற்கான காரணம், எங்களுடைய இனம் அழிக்கப்பட்டு இன்றும் வடகிழக்கில் தத்தளிக்கப்பட்ட இனமாகக் காணப்படுகின்றோம்.
எனவே, இனிவரும் காலத்தில் எங்களுக்குரிய நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும் என்று இந்த நாளில் நாம் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றோம். என குறிப்பிட்டார்.
No comments