இன்று(5) செவ்வாய்க்கிழமை நந்தவனப் பிள்ளையாரின் சங்காபிஷேகம்!
இன்று(5) செவ்வாய்க்கிழமை நந்தவனப் பிள்ளையாரின் சங்காபிஷேகம்!
அதனையொட்டிய கட்டுரை இது.
மகத்தான சமூகப் பணியாற்றிவரும் நந்தவன சித்தி விநாயகர் ஆலயம்!
பதிமுகம்
ஈழமணி திருநாட்டின் எழில் வளமிக்க மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் கண் தென்கோடியிலே ஒருபுறம் நெய்தலும் மறுபுறம் மருதமும் இருதிணை மயக்கமுற்று செழுமையும் பசுமையும் மிளிரும் காரைதீவு எனும் கிராமம் கற்றோர் உள்ளங்களை கவர்ந்து நிற்கின்றது.
கல்வியும் செல்வமும் வீரமும் போற்றப்பட்ட இம் மண் "காரேறு மூதூர்" என்று அழைக்கப்படுகிறது .
கன்னலும் கமுகும் செந்நெல்லும் விளையும் காரைதீவிலே பண்ணும் பரதமும் கல்வியும் பெற்று சீரிய தொண்டுக்கு சிறந்து விளங்கிய நீண்ட பாரம்பரியத்துடன் கூடிய தமிழர் பரம்பரையினர் வாழ்ந்து வருகின்றனர்.
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரையும், சேவையின் சிகரம் சுவாமி நடராஜானந்த அடிகளாரையும் ஈன்றெடுத்தது இந்த மண். சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் சித்துக்களையும் பல திருவருட்களையும் செய்து சமாதியானதும் இங்கேதான்.
ஆலயமுகம்!
அப்பேர்ப்பட்ட பழம் பெரும் இப்புண்ணிய பூமியில் பல புராதன ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அன்று "குளவெளிப் பிள்ளையார்" என்று அன்று அழைக்கப்பட்ட ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானம்.
அந்த ஆலயத்தில் இறுதியாக 2012.02.05 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று 2012. 03.24 ஆம் திகதி சங்காபிஷேகம் இடம் பெற்றிருந்தது.
அதன் பிற்பாடு 14 வருடங்களின்பின்பு ஆகம முறைப்படி
கடந்த 2026 ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம், இன்றைய அறங்காவலர் சபையின் பரிபாலனத்தில், மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அதன் பின்னரான
சங்காபிஷேகம் இன்று நடைபெறுகின்றது.
ஆலய மான்மியம்!
காரைதீவில் 1832ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 11ஆம் திகதி அன்றைய மட்டக்களப்பு கரவாகுப்பற்று காரைதீவு சக்கரச்செட்டி சேனாபதி என்பவரால் தனது ஆத்ம திருப்திக்காகவும், தன் மனைவி முத்துப்பிள்ளை என்பவரின் ஆன்ம சாந்திக்காகவும் இவ் ஆலயத்தை கட்டி முடித்தார்.
இச் சக்கரச்செட்டி சேனாபதி என்பவர் தனது மனைவியினது சீவியப்பிரபந்தத்திற்கு ஆலயத்தை நடத்துவதென்றும், தங்கள் சீவியத்தின் பின்னர் தனது புத்திரர்களான இவ்வூர் பாட்டுவாழியையும், மாணிக்கச்செட்டியையும் தனது மருமகன் சின்னத்தம்பி கண்ணப்பனையும் இவ்வாலய பராமரிப்புக்காரர்களாக நியமிக்கிறேன் என குறிப்படுகிறது.
இக்கோயில் என்றென்றும் நிலைபெற்று நடந்து வரும் பொருட்டு 1878ஆம் வருடம் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி அசைவற்ற சில ஆதனங்களையும் அதற்கு தருமசாதனம் செய்து, அச்சாதனத்தில் தனது மரணத்தின் பின் தனது மகள் வயிற்றுச் சந்தானத்தில் (செட்டி வேளாளர் சந்தானம்) முதன்மையான ஓர் ஆண் பிள்ளையையும், தனது சகோதரிகள் வயிற்றுச் சந்தானத்தில் (சிங்களக்குடி வேளாளர்) முதன்மையான ஓர் ஆண் பிள்ளையையும் சேர்த்து கோயிலை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் ஆலயத்தை பராமரிப்பதற்கு ஆணடியில்லாத பட்சத்தில் பெண்ணடி நியமிக்கப்பட்டு பராமரிப்பு செய்யப்பட வேண்டும் எனவும் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் கட்டும் போது தனக்கு உதவி செய்தவர்களுக்கும், அவரது சந்ததிக்கும் திருவிழா வழங்கப்பட்டது.
ஆலய கலாசாரம்!
தற்காலத்தில் இத்திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திதி முதல் பத்து நாட்கள் வெகுவிமர்சையாக திருவிழா நடைபெற்று ஆடி அமாவாசை தினமன்று தீர்த்தம் நடைபெறுகிறது.
அதன் பின்னர் இவ்வாலயத்தில் வருடப்பிறப்பு ,சித்திரா பௌர்ணமி, வினாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி விரதம், விநாயகர் விரதம், சர்வாலய குமாராலய தீபம் வருடாந்த சங்காபிஷேகம், திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், சிவராத்திரி, நவராத்திரி விரதம், ஆனிஉத்தரம், பங்குனி உத்தரம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
மகத்தான சமூகப்பணி!
ஆலயம் என்பது ஒரு சமூக ஸ்தாபனமாகும். அந்த ஸ்தாபனம் ஆலயம் சார்ந்த சமூகம் மற்றும் ஊர் சார்ந்த சமூகத்தின்பால் நிச்சயம் அக்கறை காட்டவேண்டும். அந்த சமூகத்தினது நலன்புரி விடயங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.
அந்த வகையில் ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலயம் காரைதீவூர் சார்ந்து செயற்பட்டிருக்கிறது. அதனையிட்டு இவ் ஆலய பரிபாலன சபையினர் பாராட்டப்பட வேண்டியவர்களாகின்றனர். அவர்களிடம் சமூக பிரக்ஞை இருந்திருக்கிறது. பாராட்டுகள்.
அவற்றுள் சிலவற்றை இவ்வண் சுட்டிக்காட்டுதல் சாலச் சிறந்தது என்று கருதுகிறேன்.
காரைதீவில் 2004.12.26இல் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்தம் காரணமாக கடலோரத்தில் வீடிழந்த மக்களுக்கு குடியிருப்புகளை அமைப்பதற்காக இவ்வாலய வயற்காணியில் 05 ஏக்கர் காணி பரப்பளவு வழங்கப்பட்டது. இதுவே இன்று குளவெளி குடியேற்றக் கிராமமாக விளங்குகிறது.
அத்துடன் காரைதீவு பொதுமக்களின் நலன்கருதி காரைதீவு பொது நூலகம் மற்றும் பொதுச்சந்தை அமைப்பதற்கும் இவ்வாலய காணியே பயன்பட்டுள்ளது. அதைவிட பிரதேச சபைக்குரிய வாகனங்கள் தரித்து நிற்பதற்கான "யாட் " தரிப்பிடம் அமைந்துள்ளதும் இவ் ஆலய காணியிலே ஆகும்.
எனவே இவ்வாலயம் சமூகப் பொறுப்புணர்வோடு நடந்துள்ளது எனலாம்.
அப்பேர்ப்பட்ட இவ் ஆலயத்தின் சமய சமூக கலாசார பாரம்பரிய ஆன்மீக செயற்பாடுகள் மென் மேலும் சிறக்க வேழமுகத்தானை வேண்டுகிறேன்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா( ஜே.பி)
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்,
சிரேஸ்ட ஊடகவியலாளர்,
காரைதீவு.
No comments