சுற்றுலாத் துறை நிலாவெளி பொதுக் கடற்கரையில் குறைபாடுகள் ஆய்வு – உடனடி நடவடிக்கைக்கு உறுதி..!
(அ . அச்சுதன் )
திருகோணமலை கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் கிழக்கு மாகாணத் தலைவர் பிரியந்தா மலவென்னகொட அவர்கள்,வெள்ளிக்கிழமை (17-04-2026 ) நிலாவெளி பொதுக் கடற்கரையில் நிலவி வரும் குறைபாடுகளை நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, நிலாவெளி சுற்றுலா படகு சங்கத்தின் உப தலைவர் எஸ். எம். முபின் மற்றும் சங்க அங்கத்தவர்களுடன் சந்தித்து, சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
கடற்கரைப் பகுதியில் தற்போது காணப்படும் முக்கிய குறைபாடுகளாக
இரவு நேர மின்விளக்கு வசதியின் பற்றாக்குறை
சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் இருப்பிட வசதிகளின் இல்லாமை
குடிநீர் வசதியின் குறைபாடு
கழிவு முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்கள்
என பல விடயங்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்த நிலையில், குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரியந்தா மலவென்னகொட அவர்கள் உறுதியளித்தார். குறிப்பாக, கழிவுகளை முறையாக நிர்வகிக்கும் நோக்கில் 5 குப்பைத்தொட்டிகளை வழங்குவதற்கும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் அருஸ் அவர்களும் கலந்து கொண்டு நிலைமைகளை ஆய்வு செய்ததுடன், தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நிலாவெளி சுற்றுலா படகு சங்க நிர்வாகத்தினர், இந்த முனைப்பிற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் நலனும், கடற்கரைப் பகுதியின் தரமும் உயர்த்தும் இந்த நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
No comments