Column Left

Vettri

Breaking News

கோமாரியில் இல்மனைற் அகழ்வுப் பணியை தடுத்த பிரதேச சபை உறுப்பினர் சுபோதரன்– பதற்றம்




கோமாரியில் இல்மனைற் அகழ்வுப் பணியை தடுத்த பிரதேச சபை உறுப்பினர் சுபோதரன்– மக்கள் பதற்றம் ( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி பகுதியில் அனுமதியின்றி அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாக கூறப்படும் குழுவினரை பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த. சுபோதரன் தடுத்து நிறுத்திய சம்பவம் நேற்று(11) புதன்கிழமை இடம்பெற்றது. அப் பகுதி மக்களின் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற பிரதேச சபை உறுப்பினர் த. சுபோதரன், உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி அதனை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தில் சிறிய அளவிலான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அகழ்வுப் பணி சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்எஸ்எம்.முஸரப் மற்றும் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளின் கருத்து இதுவரை வெளியிடப்படவில்லை.. இதேபோல் கடந்த காலங்களில் திருக்கோவில் விநாயகபுரம் உமிரி போன்ற பகுதிகளிலும் இல்மனைற் அகழ முஸ்தீபுகள் மேற்கொள்ள பட்ட போதிலும் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக தடைபட்டது தெரிந்ததே.

No comments