எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது. விடுகை விழாவில் பிரதேச செயலாளர் அருணன்
எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது.
விடுகை விழாவில் பிரதேச செயலாளர் அருணன்
( வி.ரி.சகாதேவராஜி)
எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது
என காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் தெரிவித்தார்.
காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி விபுலவிழுதுகளின் 27 வது வருட விடுகைவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"கல்வியில் முதலீடு செய்வதே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்" என்றும் கூறினார்.
மொன்டிசோரி பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா தலைமையில் காரைதீவு இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் நேற்று (6) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன், கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதாமதி சந்திரகாந்தன், ஓய்வு நிலை அதிபர் க.புண்ணியநேசன், தொழிலதிபர் வி.சந்திரமோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் உரையாற்றுகையில்..
முன்பள்ளி கல்வியே ஒரு குழந்தையின் அறிவு, ஒழுக்கம் மற்றும் சமூக உணர்வை உருவாக்கும் அடித்தளமாக அமைகின்றது என குறிப்பிட்டார்.
இங்கு பயின்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சோ.குருஷித், ச.பத்மவர்ஷான், பி.சாரினி, ச.டுர்க்கா, ச.சஜீன், சு.கனீஷா, வி.விருஷாளி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
பணிப்பாளர் மற்றும் ஆசிரியைகளான நிலா, ரம்யா ஆகியோரும் பெற்றோரால் கௌரவிக்கப்பட்டனர்.
மாணவரின் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. குறிப்பாக இந்து கலாசார திணைக்களம் அண்மையில் கொழும்பில் நடாத்திய தேசிய மட்ட அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கதாப்பிரசங்க போட்டியில் விபுலானந்த மொண்டிசோரி மாணவி யு.அம்சிகாவின் கதாப்பிரசங்கமும் அரங்கேறியது.
நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் விழாக் குழுவினர் கலந்து கொண்டார்கள்.
No comments