மழையுடனான காலநிலையில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்! #கல்முனை #பிராந்திய #சுகாதார #பணிப்பாளர் #எச்சரிக்கை...
மழையுடனான காலநிலையில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்!
#கல்முனை #பிராந்திய #சுகாதார #பணிப்பாளர் #எச்சரிக்கை...
மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நுளம்புகள் வேகமாக பெருகும் அபாயம் நிலவுவதுடன், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மழையுடனான காலப்பகுதிகளில் டெங்குவின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமாகும். இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
குறிப்பாக, வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் பொலிதீன் உறைகள், சிரட்டைகள், யோக்கட் கப்கள், மட்பாண்டங்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள், போத்தல்கள் உள்ளிட்ட ஏனைய கழிவுப் பொருட்களையும் முறையாக அகற்றுவதுடன், நீர் தேங்கி நிற்கக்கூடிய அனைத்து இடங்களையும் அடிக்கடி பரிசோதித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வீடுகள் மட்டுமன்றி, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகள் தமது வளாகங்கள் நுளம்புகள் அற்ற பாதுகாப்பான இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய ரீதியாக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், கல்முனை பிராந்தியத்திலும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிராந்திய பணிமனையின் கீழ் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே பிராந்தியத்திலுள்ள மக்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிராந்திய பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
No comments