கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!
கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!
பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு Rain coat வழங்கிவைப்பு
பாறுக் ஷிஹான்
பருவமழை ஆரம்பித்துள்ளதனை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பல்வேறு விசேட மற்றும் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் வியாழக்கிழமை (18) பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், தற்போதைய மழையுடனான சீரற்ற காலநிலையில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் உள்ள இடங்களை அடையாளப்படுத்துதல், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் களப்பணிகளின் நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், எதிர்வரும் காலங்களில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தொடர்ச்சியான மழை நிலைமைகளிலும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தங்களது களப்பணிகளை எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுக்கக் கூடிய வகையில், அவர்களுக்குத் தேவையான மழை அங்கிகளும் (Rain coat) இந்நிகழ்வின் போது பிராந்திய பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டன.
பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன் முத் அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.பி. மசூத், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments