ஜனாதிபதியின் நிவாரணங்களை பாராட்டுகிறோம்; ஆனால் அது மக்களுக்கு போய்ச் சேரவில்லை. -- சபையில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.
ஜனாதிபதியின் நிவாரணங்களை பாராட்டுகிறோம்; ஆனால் அது மக்களுக்கு போய்ச் சேரவில்லை.
-- சபையில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.
(எஸ். சினீஸ் கான்)
அரச உத்தியோகத்தர்கள் சிலரின் அசமந்தப்போக்குகளால் சில பிரதேசங்களில் இன்னும் நிவாரண உதவிகள் கிடைக்காதுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில். உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 22 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளையும் தங்கள் உறவுகளையும் இழந்துள்ளனர்.இந்நிலையில், நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கமும் ஜனாதிபதியும் எடுத்துவரும் முயற்சியை பாராட்டுகிறேன். அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அறிமுகம் செய்துள்ள நிவாரண தொடர்பாகவும் நாம் அவரை பாராட்டுகிறோம். ஆனால், நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றும் சென்றடையாமல் இருப்பதே பிரச்சினையாக இருக்கிறது.
எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீீமின் வேண்டுகோளுக்கமைய பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களுக்கு நாங்கள் சென்று, அந்த மக்களின் நிலைமைகளை கேட்டறிந்தபோது, அந்த மக்களின் வீடுகளை துப்புரவு செய்வதற்கான கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்ற விடயம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அரசாங்கத்தை குறைகூவில்லை. ஒருசில கிராமங்களில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கினாலே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அரச இயந்திரம் முறையாக இயங்குவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், நான் ஒரு கிராமத்துக்கு சென்றபோது, அங்கு அனர்த்தம் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்துள்ளபோதும்,
எந்தவொரு அரச உத்தியோகத்தரும் அங்குவந்து பார்க்கவில்லை எனத் தெரிந்தது. அந்த பிரதேச கிராம சேவகர் மகப்பேற்று விடுமுறையில் சென்றிருக்கிறார். அதேபோன்று கலிகமுவவுக்கு நாங்கள் சென்றபோது, அங்கு வெள்ள நீர் பல அடி உயரத்துக்கு வந்துள்ளது. அதனால் அந்த பிரதேச மக்களின் வீடுகள் முற்றாக நீரில் மூழ்கி, அவர்கள் பயன்படுத்திவந்த உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து, குப்பைகளாக வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தன.
அந்த குப்பைகளை அகற்றுவதற்கு, அங்குள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போதுமான உபகரணங்கள் இல்லை. அதனால் அரசாங்கம் இவ்வாறான தேவைகளை செய்துகொடுத்தால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களை விரைவாக துப்புரவு செய்து முடித்திருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
No comments