இன்று: மலையகத்தில் கொத்மலை வலயத்தில் 83 பாடசாலைகளும் ஆரம்பம்
மலையகத்தில் கொத்மலை வலயத்தில் 83 பாடசாலைகளும் ஆரம்பம்
( பூண்டுலோயாவிலிருந்து விரி. சகாதேவராஜா)
டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட பாடசாலைகளில் மலையகத்தின் பல பாடசாலைகள் இன்று (16) திறக்கப்பட்டன.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை வலயத்தில் உள்ள 83 தமிழ் முஸ்லிம் சிங்கள பாடசாலைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் விவேகானந்தா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றனர்.
இன்று திறக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று 16) திறக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மீண்டும் மூடப்படவுள்ளன.
மீண்டும் 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதனையடுத்து அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து தவணைப் பரீட்சைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கான உரிய ஆடைகளை அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் வழக்கமான தமது பாடசாலைக்குச் செல்வது அவசியமில்லை எனவும் தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments