சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசர கலந்துரையாடல்
சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசர கலந்துரையாடல்
பாறுக் ஷிஹான்
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வது குறித்தும், முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆராயும் விசேட அவசரக் கூட்டம் வியாழக் கிழமை (27) பள்ளிவாசல் காரியாலயத்தில் நடைபெற்றது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில, அதன் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் பள்ளிவாசல் காரியாலயத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் நம்பிக்கையாளர் சபையின் அழைப்பின் பேரில், கல்முனை பிரதேச செயலாளர் அஷ்-ஷேக் டி. எம். எம். அன்ஸார், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், கல்முனை பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுவராச்சி மற்றும் பிரதம பொலிஸ் பரிசோதகர் முஹம்மட் வாஹிட் உள்ளிட்ட அரச மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முக்கியத் தீர்மானங்கள் மற்றும் கலந்துரையாடல்கள்:
• அனர்த்த அபாய முன்னெச்சரிக்கை: கல்முனைப் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் அனர்த்த அபாயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடிப் பதிலிறுப்பு நடவடிக்கைகள் குறித்தும் திட்டமிடப்பட்டது.
• பாதுகாப்பு ஏற்பாடுகள்: கடல் சீற்றம் மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயகரமான இடங்களை வேடிக்கை பார்ப்பதற்காகப் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்த்தல் மற்றும் அவர்களைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரியிடம் விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பொலிஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
• ஒருங்கிணைந்த செயற்பாடுகள்: அனர்த்தக் காலங்களில் மேலதிக பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை பிரதேச செயலகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பது குறித்தும் இணக்கம் காணப்பட்டது.
• நிவாரணப் பணிகள்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயரக்கூடிய குடும்பங்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சமைத்த உணவு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான தயார்படுத்தல்களை நம்பிக்கையாளர் சபை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மீனவர்களுக்கான விஷேட கவனம்: அனர்த்தத்தினால் தீவிரமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குரியாயிருக்கும் மீனவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனும் வேண்டுகோளும் நம்பிக்கையாளர் சபையினால் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டம், பிராந்திய மக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாக்கி, தேவையான அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அடிப்படையில் நிறைவுற்றது.
No comments