அம்பாறையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்
அம்பாறையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்
பாறுக் ஷிஹான்
அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழை காரணமாக அம்பாறை கொண்டைவட்டுவான் குளத்தின் நீர் சுமார் ஆறு அங்குலம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக அம்பாறை-இகினியாகல வீதியில் போக்குவரத்துக்கு சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது.கொண்டைவட்டுவான் நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.மேலும் அருகில் உள்ள குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பி நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இகினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 77 அடி ஒன்பது அங்குலம் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் எக்கலோய நீர்த்தேக்கம் , பன்னல்கம குளம், நாமல் ஓயா நீர்த்தேக்கம் ,அம்பலனோயா குளம், ஆகியற்றின் நீர் மட்டங்கள் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை குளத்தின் நீர்மட்டம் 6 அடி 9 அங்குலமாகவும் நிரம்பி வழியும் நீர்மட்டம் 13 அடியாகவும் உள்ளது. இதற்கிடையில் கனமழை காரணமாக கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் உள்ள நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதே வேளை சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது.
தற்போது எமது பிரதேசத்தில் பெய்து வரும் மழை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால்இ வெள்ள அனர்த்தத்திலிருந்து பொதுமக்கள் தங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவசியமில்லாமல் நீர்நிரம்பக் கூடிய ஆறுகள்இ குளங்கள் போன்றவைகளுக்கு செல்வதையும்இ கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதையும் இயன்றவரை தவிர்த்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும்இ இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இவ்விடயத்தை உணர்த்தி பெற்றோர்கள் இவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பள்ளிவாசல்கள் ஊடாக பொதுமக்களை அறிவுறுத்துமாறு எமது சபையைக் கேட்டுள்ளார்.
எனவே சகலரும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளது.இது தவிர வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை துரித நடவடிக்கை மேற்கொண்டு முகத்துவாரங்கள் அனைத்தும் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவுறுத்தலின் பேரில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரியநீலாவணை பிரதேசங்களின் கடல் வாய் முகத்துவாரங்கள் தோண்டித் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கல்முனையின நடராசா வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் யாவும் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் திட்டுகளினாலும் நிரம்பியுள்ள வடிகான்கள் துரிதமாக சீர்செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை கல்முனையையும் நாவிதன்வெளி, சவளக்கடை மற்றும் கொலனிப் பகுதிகளையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியில் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பரவியிருந்த ஆற்று வாழைகள் அகற்றப்பட்டு, அப்பாதை சீர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெள்ள அனர்த்தம் ஏற்பட அதிகரித்த மழைவீழ்ச்சி மட்டுமில்லாது முறையற்ற பல மனித நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. சொத்து சேதம், மற்றும் மனித உயிரிழப்பு ஆகிய இரண்டின் அடிப்டையில் மிகவும் விலையுயர்ந்த பேரழிவுகளில் ஒன்றாக வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. இலங்கையும் இன்று அடிக்கடி வெள்ளப் பெருக்கு அபாயத்தை எதிர் நோக்கி வரும் நாடாக மாறிவருகின்றது அந்த அடிப்படையில் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படுகின்ற இடங்களில் பொது மக்களை பாதுகாப்பதற்கு பொலிஸார் கட்டாயம் கடமையில் ஈடுபடுத்தப்படல் அவசியம்.
இயற்கை அனர்த்தப் பாதிப்புகளுக்கு இடம், காலம் என்பன ஒரு போதும் தடையாக இருப்பதில்லை. இவை எங்கும் எப்போதும் தோன்றலாம். அனர்த்த வாய்ப்புகள் குறைவானதென கருதப்பட்ட பல பகுதிகளில் அண்மைக் காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதாக நாம் அறிகிறோம்.
இவ் இயற்கை அனர்த்தங்களில் காலநிலை அனர்த்தங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றவையாக மாறியுள்ளன. உலகளாவிய ரீதியில் உள்ள காலநிலை மாற்றத்தின் விளைவாக காலநிலை அனர்த்தங்கள் அடிக்கடி தோன்றுகின்ற அதேவேளை, இவற்றினுடைய அழிவுகளும் அதிகமானவையாகக் காணப்படுகின்றன. கடந்த வருடம் ஏற்பட்ட அடை மழை காரணமாக இப் பிரதேசத்தில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட ஏழுபேர் மரணமான சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இவ் இயற்கை அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் கிழக்கு மாகாணத்திலும் அதிகமாகவே உள்ளன. வட கிழக்கு மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலநிலை அனர்த்தங்களாக சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வரட்சி என்பனவற்றைக் குறிப்பிடலாம். இவ் செய்தி வெள்ள அனர்த்தம் பற்றியே குறிப்பிடுகின்றது.
இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது வேறான காலநிலைப் பண்புகளைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் காலநிலைப் பண்புகளை எதிர்வு கூறுவது அவ்வளவு சுலபமான விடயமன்று. எனினும் கடந்த 120 ஆண்டுகால காலநிலைத் தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில் சில விடயங்களை எதிர்வு கூற முடியும். அந்த அடிப்படையில் மழை வீழ்ச்சி, வெள்ளப் பெருக்கு என்பவற்றினை ஓரளவுக்கு எதிர்வு கூற முடியும். ஆனால் அனைவரும் நினைப்பது போல், வானிலை மற்றும் கால நிலை நிகழ்வுகள் எதிர்வு கூறப்பட்டால், அதன்படி நிச்சயமாக நடைபெற வேண்டும் என்ற விதி இல்லை. ஏனெனில் உலகளாவிய ரீதியிலான காலநிலை மாற்றமும், எதிர்வு கூறப்படும் இடத்தின் வளிமண்டல இயல்புகளும், ஏனைய இடங்களின் வளிமண்டலக் குழப்பங்களும், கடல் – தரைப் பண்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், இவ் எதிர்வு கூறலை மாற்றக்கூடிய வாய்ப்பு உண்டு.
இந்த வகையில் கடல் மற்றும் தரைப் பகுதி வெப்ப வேறுபாடுகள், மழை வீழ்ச்சிப் போக்கு, வங்காள விரிகுடாவின் அமுக்க வேறுபாட்டு நிலைமைகள் என்பனவற்றை கருத்திற் கொண்டும், ஏனைய பொருளாதார – சமூகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணம் முழுவதும், அல்லது ஏதாவது ஒரு மாவட்டம், குறிப்பாக அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில், எதிர்கொள்ளவுள்ள வெள்ள அபாயத்தின் சாத்தியக் கூறுகளை விளக்குவதாக உள்ளது. அந்த வகையில் பின்வரும் விடயங்கள் வெள்ள அபாயத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
அந்த வகையில் வடகீழ்ப் பருவக்காற்று
மேற்காவுகை சூறாவளி, தாழமுக்கம்
ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடகிழக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடகிழக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக கிழக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடகிழக்கு பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிழக்கு மாகாணத்தில் பெருந்தெருக்கள் நிர்மாணம், கட்டிட அமைப்புக்களின் நிர்மாணம் போன்ற பல்வேறு வகைப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாணத்தினுடைய இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால் அமைப்புகள் சிதைந்து போயுள்ளமையைக் காண முடிகின்றது. இதனால், கனமழை கிடைக்கின்ற காலப் பகுதிகளில், நீர் வடிந்து போக இடமில்லாததால், தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதைக் காண முடிகின்றது. அகழ்வுச் செயற்பாடுகள் மற்றும் கட்டுமானச் செயற்பாடுகளின் காரணமாக, குளங்களுக்கு அல்லது நீர்த் தேக்கங்களுக்குச் செல்ல வேண்டிய நீர், குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்குவதை அவதானிக்க முடிகிறது.







No comments