அலிக்கம்பை பிரதான வீதியில் உள்ள தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் அப்பாதை போக்குவரத்துக்கு தடை. குடிநீர் இணைப்பும் தடை
வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று அலிக்கம்பை பிரதான வீதியில் உள்ள தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் அப்பாதை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் அலிக்கம்பை பிரதான குடிநீர் இணைப்பு குழாய் வெள்ளத்தினால் அள்ளுண்டதனால் குடிநீர் இணைப்பும் தடைப்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த காற்றுடனான மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ளம் பாய்ந்து வருவதால் பிரதான வீதிகள் சில போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அம்பாரை பிரதான வீதியில் அதிகாலையில் வீழ்ந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளிட்டவர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.
இதேநேரம் வெள்ளம் புகுந்த வீடுகளில் வாழ்ந்த மக்கள் இடப்பெயர்ந்தும் வருகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
ஆயினும் வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக இருந்த பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரங்களை நீர்ப்பாசன திணைக்களம் கனரக வாகனத்தின் உதவியோடு அகற்றி வருகின்றது.
வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்துள்ள நிலையில் 135 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 24 குடும்பங்கள் இடப்பெயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பிலும் அவர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
No comments