நாட்டில் தற்சமயம் வேலையின்றி 365,951 பேர்!!
நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டின் தொழிலாளர் படை அறிக்கைக்கு அமைய, 2024 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4.5 ஆக இருந்த வேலையின்மை வீதம், 2025 இல் 3.8 வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 4.7 ஆகக் காணப்பட்ட வேலையின்மை வீதம், 2025 ஆம் ஆண்டில் 3.8 வரை குறைவடைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கல்வித் தகைமைகளுக்கு அமைய வேலையற்றுள்ளவர்களின் எண்ணிக்கையில் க.பொ.த சாதாரண தரத்திற்குக் கீழுள்ளவர்கள் ஒரு இலட்சத்து மூவாயிரத்து முன்னூற்று எட்டு (103,308) பேர் எனவும், க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் தொண்ணூற்று ஓராயிரத்து நானூற்று ஐந்து (91,405) பேர் எனவும் குறிப்பிட்டார்.
க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த ஒரு இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து தொளாயிரத்து என்பத்து நான்கு (128,984) பேர் இவ்வாறு வேலையற்றுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமைகளைக் கொண்ட 42,254 பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே 12,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆட்சேர்ப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
No comments