கல்முனையில் நவீனத்துவம் காணும் மருத்துவ ஆய்வுகூட சேவைகள்!!
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட சேவைகள் மேம்பாட்டை மையப்படுத்திய ஒரு முக்கியமான கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணனின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிதாக நியமனம் பெற்ற Chemical Pathologist மருத்துவர் ரி. இந்துஜா,
மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் (MLTs), தாதியபரிபாலகர், திட்டமிடல் குழு, மற்றும் பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையையும் உறுதியையும் வெளிப்படுத்தினர்.
இந்த கலந்துரையாடலின் போது மருத்துவ ஆய்வுகூடத்தின் தற்போதைய இடவசதி, கருவிகள், மற்றும் செயல்முறைகள் மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் Laboratory Information System (LIS) ஐ Hospital Health Information Management System (HHIMS) உடன் ஒருங்கிணைக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டது.
அனைவரும் இணைந்து மருத்துவ ஆய்வுகூடத்தை நவீன தொழில்நுட்பத்துடன், துல்லியமான செயல்முறைகளுடன், நோயாளி நலனை மையமாகக் கொண்டு வளர்த்தெடுக்க ஒற்றுமையுடன் உறுதியடைந்தனர்.
பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் தமது உரையில்,
“மருத்துவ ஆய்வுகூடம் என்பது வைத்தியசாலையின் இதயம் போன்றது. இதன் திறன், துல்லியம், மற்றும் வேகம் உயர்ந்தால் நோயாளி சேவைகளின் தரமும் உயர்கிறது. எனவே நாம் அனைவரும் இணைந்து தரநிலையுள்ள ஆய்வுகூடத்தை உருவாக்க முனைவோம்.”
என்று வலியுறுத்தினார்.
இது, கல்முனை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட சேவைகள் ஒரு புதிய தரநிலைக்குத் திரும்பும் நம்பிக்கையூட்டும் பயணத்தின் தொடக்கம் ஆகும்.
No comments