அர்ப்பணிப்புள்ள "ஒஸ்கார்" தலைமை தொடர வேண்டும்; வலயக்கல்விப் பணிப்பாளர் மகேந்திரகுமார் வேண்டுகோள்!!
( வி.ரி.சகாதேவராஜா)
நல்ல பல அர்ப்பணிப்புள்ள சேவைகளை தொடர்ச்சியாக புரிந்து வரும் "ஒஸ்கார்" தலைமை அடுத்த ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும். அப்போது எமது மண்ணும் மக்களும் வளம் பெறும்.
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளி ஏழாம் கிராமம் கணேசா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதனின் வழிநடத்தலில், "ஒஸ்கார்" அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் உபதலைவருமான பிரபல கட்டடக் கலைஞருமான அரசரெத்தினம் மகேந்திரன் இத் திட்டத்திற்கு ஒருங்கிணைப்பையும் பூரண நிதியுதவியையும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வு , குறித்த பாடசாலையில் அதிபர் திருமதி கார்த்தியாயினி துரைலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார்
கௌரவ அதிதியாக இலங்கை தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
அங்கு பணிப்பாளர் மகேந்திரகுமார் மேலும் தெரிவிக்கையில்..
அவுஸ்திரேலியாவிலுள்ள காரைதீவு மக்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் எமது மண்ணையும் மக்களையும் நினைத்து அதிகளவு உதவி வருகிறார்கள். குறிப்பாக அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதனின் தலைமையில் பல வேலைத்திட்டங்கள் குறுகிய காலத்தில் நடந்தேறி வருவதனை காண்கிறேன். அவரது சேவை மேலும் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன். என்றார்.
நிகழ்வில் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments