சாய்ந்தமருதுக்கு தனியான அபிவிருத்தித் திட்டம்.! பாராட்டு விழாவில் ஆதம்பாவா எம்பி!!
( வி.ரி.சகாதேவராஜா)
உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன . அதேவேளை சாய்ந்தமருதுக்கு தனியான
அபிவிருத்தித் திட்டம் அமுலாகும்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (18) சனிக்கிழமை இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.
வித்தியாலய அதிபர் எம் .ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எங்களது பிராந்தியத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கென தனியான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொலிவேரியனுக்கான இரும்புப் பாலம், பழைய வைத்தியசாலை வீதிப் பாலம் மற்றும் கடற்கரைப் பாலம் என்பன மீள் நிர்மாணம் செய்யப்படும். கரைவாகு வட்டை வடிச்சல் நீர் வடிந்து ஓடக்கூடிய வகையில் திட்டம் வகுத்து அபிவிருத்தி செய்யப்படும். கரைவாகு வட்டை தரிசு நிலங்களை நிரப்பி குடியிருப்புக்களை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படும். என்றார்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சகல மாணவர்களுக்குமான பரிசில்களை ஆதம்பாவா எம்.பி. வழங்கி மாணவர்களை கெளரவப்படுத்தினார்.
No comments