உலக அஞ்சல் தினத்தை பற்றிய கட்டுரை!!
செயற்கை நுண்ணறிவு மூலம்
தபால் விநியோக முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் அவசியம்.
—- எம் எம் ஏ முபாறக் ஜே.பி. (SPM)-0776320657
ஆஸ்பத்திரி வீதி சாய்ந்தமருது
.
வருடாந்தம் ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதியை உலக அஞ்சல் தினம் எனப் பிரகடனப்படுத்தி தபால் பரிவர்த்தனையின் ஆதிகால வரலாற்றையும நம் வாழ்வியலில் அது கொண்டிருக்கும் பிணைப்பையும் அதன் முக்கியத்துவப் பண்புகளையும் நாம் விளங்கி வருகிறோம்.
மறுபுறத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப வருகைகள் தபால் விநியோக முறைமையில் எத்ததைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிந்து கொள்வதும் அதுபற்றிப் பேசுவதும் அவசியமாகின்றது.
எனவே, நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் டிஜிட்டல் முறைச் செயற்பாடுகளும் தபால் விநியோக முறைமையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை இக்கட்டுரை விசாரணை செய்கிறது.
வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் தவிர்க்க முடியாமல் பங்கு கொண்டிருந்த தபால் சேவையின் இன்றைய நிலை என்ன?
வரலாற்றுக் காலம் தொடங்கி செய்திப் பரிவர்த்தனை முறைமை இடம்பெற்று வந்தாலும் கூட 1635 இல் பிரிட்டனின் ஆங்கிலேய அரசு .ரோயல் மெயில் சேவையை ஆரம்பித்து நவீன தபால் விநியோக முறைமைக்கான அடிக்கல்லை நட்டு வைத்தது.
அதன் தொடர்ச்சியாக சுமார் நூற்றி ஐம்பது வருடங்கள் கடந்த நிலையில் இலங்கை முழுவதும் தபால் விநியோக முறைமை
1815 இல் அமுலுக்கு வந்தது.
அன்றிலிருந்து இன்றுவரை இச்சேவையின் ஒவ்வொரு நகர்வினையும் நாம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம்.
பாட்டி போய் விட்டாளா? வயல் காணி விளைச்சல் எப்படி ? செவலயன் குட்டி போட்டதா? என்று ஒரு தபால் அட்டையில் குடும்பத்தின் சகல விவரங்களையும் தெரிந்து கொண்ட ஒரு காலம் அன்று இருந்தது.
தந்தி வந்தாலே போதும் வாசிக்காமலேயே மரணச் செய்தியென்று மயங்கி விழுந்து அழுது புரண்ட காலம் அது.
அரசாங்க ஊழியனின் நியமனமும் இடமாற்றமும் ஏன் சம்பளமும்கூட தபால் சேவையின் கைகளிலேயே கட்டுண்டு கிடந்தது.
இவைபோல் பேசுவதற்கு எவ்வளவோ உண்டு. ஆனால் இன்று நிலைமை வேறு.
தபால்காரனின் சைக்கிள் மணியோசைக்குக் காத்திருந்த காலம் போய் தொலைபேசியின் அழைப்புக்கு காது கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
பார்சல் சேவையின் பெரும் பகுதியை கூரியர் சேவை பறித்தெடுத்துக் கொண்டது.
வாகனங்களின் அசுர வளர்ச்சி போக்குவரத்தில் தாமதங்களை ஏற்படுத்தி காலை நேரக் கடித விநியோகத்தை கஸ்டத்தில் தள்ளியுள்ளது.
மின்னஞ்சல் பாவனையும் இணைய வழி வணிகமும் வருமானத்தைப் பாதித்து அபிவிருத்தியை முடக்கியுள்ளது.
நவீன தொழில் நுட்ப வசதிகளைப்பெற முடியாத நிலையில் கிராமப்புற மக்கள் பெரும் கஸ்டத்தை அனுபவிக்கின்றனர்.
இவற்றுக்கெல்லாம் தபால் திணைக்களம் ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வசதிக் குறைபாடுகளிலிருந்து மீண்டெழ வேண்டியுள்ளது.
எனவே பின்வரும் செயற்பாடுகளை தபால்துறை முன்னெடுக்க வேண்டுமென்று இக்கட்டுரை பிரேரிக்கின்றது.
* தபாலகங்களை அதிநவீன கருவிகள் மூலம் மேம்படுத்துதல்.
* தபாலகங்களை கணனி மயப்படுத்தி செயல்படு தன்மையின் வேகத்தை அதிகரித்தல்.
* அரச செலவில் ஊழியர்கள் நவீன தொழில் வாண்மைப் பயிற்சிகளைப் பெற ஊக்குவித்தல்.
* பணக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் இணைய வழி ஊடாக இடம் பெறுதல்.
(தற்போது அமுலில் இருக்கும் இணையவழி கொடுக்கல் வாங்கல்களுக்கு மேலதிகமாக இதனை முன்னெடுத்தல்)
* தபால் திணைக்களத்தின் ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையினர் விரைவில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.
எனவே ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளல்.
இவற்றிற்கும் அப்பால் செயற்கை நுண்ணறிவு ஊடாக தபாலக ஊழியங்கள் மேன்மைப்படுத்துதல்
இன்றியமையாதது.
* தபால் தரம் பிரிக்கும் (Automated Sorting ) செயல்முறையில் செயற்கை நுண்ணறிவின் உதவி பெறப்படுதல் .
* குறைந்த செலவிலும் குறைந்த நேரத்திலும் குறைந்த தூரத்தைப் பயன்படுத்தி தபால் விநியோகம் செய்யும் முறையை செயற்கை நுண்ணறிவு செயலியிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்.
* தபால் திணைக்களத்தில் தற்போது அமுலில் இருக்கும் விரைவுத் தபால் பதிவுத் தபால் மற்றும் பொதிகளின் விநியோகத்தின்போதே பணம் கொடுக்கும் முறை (COD) போன்ற நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல்.
மேலுள்ளது போன்ற முன்வைப்புகளைச் செயற்படுத்துவதன் மூலம் அடுத்த வருட உலக அஞ்சல் தினத்திற்கு முன்னதாக தளம்பலற்ற சேவை வழங்குநராக தபால் திணைக்களம் தலை தூக்க வாய்ப்புகள் உண்டு.
No comments