நடுநிசியில் காரைதீவுக்குள் புகுந்து காட்டு யானை துவம்சம்! பாரிய சேதம் ;மக்கள் அல்லோல கல்லோலம்!!
( வி.ரி. சகாதேவராஜா)
ஒட்டுமொத்த ஊரே உறங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை அந்த பிரதேசத்தை துவம்சம் செய்து வெளியேறியது . மக்கள் விடிய விடிய பீதியுடன் அல்லோல கல்லோலப்பட்டனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.17 மணி அளவில் இடம் பெற்றது.
காரைதீவு மேற்கே உள்ள வயல் பகுதியில் இருந்து திடீரென உள் நுழைந்த தனியன் யானை ஒன்று கண்ணகி அம்மன் ஆலய கவடா வளவிற்குள் புகுந்து பின் மதிலை உடைத்துக் கொண்டு ஊர்மனைக்குள் புகுந்தது.
ஊர் குடிமனைப்பகுதியில் மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளையில் ஐந்து வீடுகளின் எல்லை மதில்களை உடைத்து சந்திரகுமார் என்பவரின் களஞ்சிய அறையிலிருந்த நெல்லை உறிஞ்சிக் குடித்தது.
அப்பகுதியில் இருந்த வாழை தென்னை மரவள்ளி போன்றவற்றை சரித்து உண்டு துவம்சம் செய்தது .
மக்கள் செய்வதறியாது உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடுநிசியில் ஓட்டம் பிடித்தனர் .
அந்தப் பிரதேசமே நடுநிசியில் அல்லோல கல்லோலப்பட்டது. நாய்களும் குரைக்க யானை மதம் பிடித்து ஓடத் தொடங்கியது.
நிலைமை மோசமாகியது. அந்த யானை தொடர்ந்து வளவுகளுக்குள்ளால் மதிலை உடைத்துக் கொண்டு சென்று மீண்டும் வயலை சென்றடைந்தது .
மக்கள் விடிய விடிய பீதியுடன் பொழுதைக் கழிக்க நேர்ந்தது.
தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏற்பட்டதில்லை.
பெரும் சேதத்தை எதிர்கொண்ட சந்திரகுமார் என்ற குடிமகன் கூறுகையில்.. நாம் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபொழுது திடீரென பாரிய சத்தம் கேட்டது. புயல் அடிக்குதோ என் நினைத்து எழுந்து பார்த்த போது பெரும் கரிய உருவத்துடன் யானை ஒன்று நின்றது. ஒரு கணம் ஈரற்குலை நடுங்கியது.
இப்படி அது சேதம் விளைவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பீதி கொண்டு ஓடினோம். இந்த சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மற்றும் யானை வராமல் மக்களை பாதுகாக்க வேண்டும். உரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் பல உயிர்களையும் இழக்க வேண்டி நேரிடும்.என்றார்.
No comments