வவுனியாவில் 3லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!!
வவுனியாவில் மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் திங்கட்கிழமை (20) தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரட்ண விஜயமுனி அவர்களின் ஆலோசனையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் விமல் பியரட்ண தலைமையிலான பொலிசார் மேறவ்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
வவுனியா, ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த பொலிரோ ரக வாகனத்தை இ.போ.சபை சாலைக்கு அருகில் மறித்த பொலிஸார் விசேட சோதனை மேற்கொண்ட போது குறித்த வாகனத்தில் போதை மாத்திரைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மாத்திரைகள் மற்றும் வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டார். குறித்த வாகனத்தில் இருந்து மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதை உடமையில் வைத்திருந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments