Column Left

Vettri

Breaking News

கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு பொலிஸ் ஆலோசனை குழுவின் பிரியாவிடை!!




பாறுக் ஷிஹான்

இன நல்லிணக்கம்,பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை  பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு   கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட  பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்களினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டு  பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு இன்று மாலை கல்முனை தனியார் விருந்தினர் விடுதியில்  நடைபெற்றதுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட இடமாற்றம் பெற்று செல்லும்  கல்முனை பொலிஸ் நிலைய தலைமை  பொறுப்பதிகாரி சிறு கலந்துரையாடல் ஒன்றினை பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்களுடன் மேற்கொண்டார்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த  அவர்

கல்முனை  தலைமை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் எனது தலைமையின் கீழ்  பல்வேறு   குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.இதற்கு  கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள்  பொதுமக்கள் மற்றும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியாக இருந்தனர். இவ்வாறு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை பொலிஸ் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலுக்கமைய என்னால்   கல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை வீடு உடைப்பு  உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் உரிய தகவல்களை  பெற்று  உடனடியாக எம்மால் அவற்றை  தீர்க்க முடிந்தது.இது தவிர பொலிஸ் ஆலோசனை குழு கூட்டங்களில்  ஊடாக பல்வேறு செயற்திட்டங்களை பொதுமக்களுக்காக இலங்கை பொலிஸ் முன்னெடுத்துள்ளது.இந்த கல்முனை பிராந்தியத்தில் உள்ள சகல மக்களுக்கும் பணியாற்ற கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்பு  எனது பதவிக்காலத்தில் சிறப்பாக கிடைக்கப்பெற்றது. அத்துடன் கல்முனை சமூக பொலிஸ் பிரிவுடன் இணைந்து ஆலோசனை குழு சரியான வினைத்திறனுடன் இயங்குவதை தற்போது என்னால் காண முடிகின்றது.எனவே பல்வேறு செயற்திட்டங்களை இக்குழுவின் ஊடாக எதிர்காலத்தில் எமது பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கும்  என நம்புகின்றேன்  என்றார்.


கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு பிரியாவிடை கொடுப்பது என்பதை எனது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.எனினும் அரசாங்கத்தின் சுற்றுநிருபம் உள்ளிட்ட வருடாந்த இடமாற்றம் என்ற அடிப்படையில் அவரது இடமாற்றமானது அமைந்திருக்கின்றது.எம்மை அவர் விட்டு பிரிவதானது எம்மால் தாங்க முடியவில்லை.கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக  கடமையாற்றிய  பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீரின்  இடமாற்றத்தை ஏதோ ஒரு வகையில் மனதை தேற்றி நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.அவரது சேவைக்காலத்தில் பொது மக்கள் மத்தியிலும்  பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது.இதற்கு காரணம் எமது ஆலோசனை குழுவின் ஒருங்கிணைப்பு ஆகும். இதனால் கல்முனை தலைமை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாரிய கொள்ளைச் சம்பவம் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் என்பன இடம் பெறாமல் காணப்பட்டமை சிறப்பம்சமாகும். பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர் அவர்களின் சேவைக் காலத்தில் பல்வேறு மாற்றங்கள்   இடம்பெற்றுள்ளன.அதுமட்டுமின்றி விசேடமாக போதைப்பொருள் ஒழிப்பு போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தனது முழுமையாக அர்ப்பணித்த ஒருவர் என குறிப்பிட்டார்.


மேற்குறித்த நிகழ்வில்   சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  வாஹிட் ஏ.எல்.ஏ. வாஹிட் கல்முனை தலைமையக பொலிஸ்  மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான   பி.ரி  நஸீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக  கடமையாற்றிய  பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வருடாந்த இடமாற்றத்திற்கமைய கம்பஹா மாவட்டத்தின் பூகொட பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியாக கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.இதே வேளை கேகாலை  மாவட்டம் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர்   லசந்த களுவாராய்ச்சி என்பவர் திங்கட்கிழமை(29) காலை கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக பதவியேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments