முஸ்லிம் சமூகத்தின் அடையாளம்; பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்..!
மாபெரும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுடைய இழப்பு என்பது முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் முஸ்லிம் சமூகத்திற்கு விட்டுச் சென்ற மிகப் பெரும் சொத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். அதன் மூலமாக இன்று இந்த நாட்டில் பல முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக, தலைவர்களாக உருவாகியிருக்கின்றனர். அத்தனை பேருக்குரிய தாயகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இருக்கிறது.
அவர் முஸ்லிம் மக்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்தவர். எந்தச் சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் விட்டுக் கொடுக்காதவர்.
நான் அவருடன் 1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்தில் இருந்தேன். அவரோடு பல்வேறு கூட்டங்கள், நிகழ்வுகள், சர்வதேச கலந்துரையாடல்களுக்கு சென்றிருக்கிறேன்.
குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிக மோசமான, பயங்கரமான காலகட்டம்தான் 1990 - 2000 வரையிலான காலப்பகுதி. முஸ்லிம்கள் படுகொலை, முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமை, கிழக்கு மாகாணத்தில் பல முஸ்லிம் கிராமங்கள் அழிக்கப்பட்டமை, முஸ்லிம்களின் சொத்துக்கள் சுரண்டப்பட்டமை உட்பட பல சோதனையான காலம். அப்போது முஸ்லிம்களை பாதுகாப்பது, கிராமங்களை பாதுகாப்பது, LTTE யின் அட்டகாசத்திலிருந்து மக்களை பாதுகாப்பது போன்ற முக்கிய விடயங்களுக்கு அவருடைய தலைமையில் தான் கட்சி முகங்கொடுக்க வேண்டியிருந்தது.
அந்தக் காலப்பகுதியில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவில் கொள்ள வேண்டியது. நாம் அவரோடு ஒன்றாக இருந்து இவ்விடயங்களை கையாண்டோம்.
அதுபோன்று, முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில், பல சவால்களை எதிர்நோக்கி போராடி, தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு தீர்வை பெற்றுக் கொடுத்தவர் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்.
முஸ்லிம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள், அபிவிருத்திப் பணிகள் பல உள்ளன. LTTEயினரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளம் பிரதேசத்தில் காணிகளை வழங்கி குடியேற்றியது போன்ற பல சிறப்புப் பணிகளை செய்தவர்.
எமது மறைந்த மாபெரும் தலைவர், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், முஸ்லிம் சமூகத்தின் மூத்த விடுதலைப் போராளி, விடுதலை உணர்வை எமக்கு ஊட்டிய எம் தலைவருடைய தூய பணிகளை அல்லாஹ் தஆலா ஏற்று, உயர்ந்த சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றோம்.
– கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
பிரதித் தலைவர்,
No comments