கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படுகிறது - பிரதமர்!!
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படுகிறது என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கல்வி முறையிலும் மாற்றம் அவசியமில்லை என கூறுவது விந்தையானது என தெரிவித்த அவர், எதிர்க்கட்சியினர் கூறுவது போல் கல்வி மறு சீரமைப்பில் எந்தவிடயமும் மறைக்கப்பட வில்லை எனவும் குறிப்பிட்டார்.
புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த பிரதமர்,
உத்தேச கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உரிமை தொடர்பாக எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனால், இது தேசிய மக்கள் சக்தி முன்வைத்த யோசனைகள் அல்ல. உலக மாற்றத்திற்கமைய ஒவ்வொரு காலத்தில் கலந்துரையாடப்பட்டு உருவானது.
இதனால், இதில் எவருக்கும் தனிப்பட்ட ரீதியில் உரிமை கோர முடியாது. இப்போது ஏற்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புடன் பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போதைய கல்வி முறையில் பல்வேறு குறைபாடுகளும் பிரச்சினைகளும் உள்ளன. பாடசாலைகள் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இடைவிலகும் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். எத்தனை பேர் குறைந்த சம்பளத்தில் இருக்கின்றனர் என ஆராய வேண்டும்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய கல்வி அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோன்று தொடர்ச்சியாக பாடசாலைகளுக்கு வராத மாணவர்களும் உள்ளனர். இதனால் எமக்கு இப்போதும் பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம்.
இந்த கல்வி மறுசீரமைப்பு பாடங்களுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. பரந்தளவான மறுசீரமைப்பாகும். கல்வி மறுசீரமைப்புக்கு பாடங்களை மட்டும் மாற்றி பயனில்லை. அதற்கும் அப்பாலான விடயங்கள் உள்ளன.
இதன்படி பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. பாடசாலை அபிவிருத்தி திட்டங்கள், டிஜிட்டல் கல்விக்கான வசதிகள், மனித வளங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
No comments