Column Left

Vettri

Breaking News

"ஓம்" இன்றிய கதிர்காமம்! கதிர்காமம் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகவே கைநழுவிப் போகின்றதா?




 கதிர்காமத்தில் தமிழ் மக்களது பாரம்பரியங்கள் மற்றும் அவர்களது மடங்கள் அடையாளங்கள் அழிக்கப்பட்டமை காரணமாக தமிழ் மக்களுக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது என்பது அண்மைக் காலமாக கூறப்பட்டு வருகிறது.


எனினும்,யாழ் செல்வச்சந்நிதி தொடக்கம் வடக்கு கிழக்கு மலையகம் என  நாடெங்கிலும் இருந்து பாதயாத்திரை மற்றும் ஏனைய வழிகளில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கதிர்காமம் சென்று வருகின்றனர். 

இப் பாதயாத்திரை மறுசீரமைக்கப்பட வேண்டும்; வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் வருடாவருடம் உற்சவ காலப்பகுதியில் கூறுவார்கள். பின்னர் அந்த வேகம் குறைந்து விடும். இம்முறை 50 வீதமானோர் பௌத்தர்கள் சப்பாத்து கண்ணாடி சகிதம் சுற்றுலாப் பயணிகள் போல் பயணித்த தையும் காணமுடிந்தது. ஆனால் வெள்ளைக்காரர்கள் எம்மவர் போல் வேட்டியுடன் திலகமிட்டு பயணித்ததையும்  காணமுடிந்தது.எம்மவர்களில் சிலர் பைலாக கும்மாளம் என்று பயணித்த மையும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது 

அந்தக் காலத்தில் தமிழருக்கும் கதிர்காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. எனினும் இந்தத் தொடர்பு 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறைவடைற்து, இடைவெளி ஏற்படத் தொடங்கிவிட்டது.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. 

குறிப்பாக கதிர்காமத்தில் காணப்பட்ட இராமகிருஷ்ண மிஷன் மடத்தை, அரசாங்கம் சுவீகரித்துக்கொண்ட பின்னர், தமிழ் மக்கள் அங்கே செல்வதை குறைத்துக்கொண்டார்கள். 

குறித்த கதிர்காமம் இ.கி.மடம் 1953 இல் பிரதமர் டட்லி சேனநாயக்காவால் திறந்து வைக்கப்பட்டது.

 1943 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல அமைப்புகள் கதிர்காமத்தில் உள்ள புனித ஆலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்களுக்கு சேவை செய்யத் தொடங்கியது. அதன் ஓரங்கமாக உலகளாவிய ரீதியில் வியாபித்து ஜீவசேவையாற்றிவரும் இராமகிருஷ்ண மிஷன் அமைப்பும் கதிர்காமத்தில் காலூன்றியது.

அதன் காரணமாக விசாலமான கட்டிடங்கள் கட்டப்பட்டு ராமகிருஷ்ண மிஷன் மடம் 1953 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த மாண்புமிகு டட்லி சேனாநாயக்க அவர்களால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. 
 அப்போதிருந்து, மத வேறுபாடின்றி யாத்ரீகர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டது.
 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும் வருடாந்த திருவிழாவின் போது, ​​17 நாட்களுக்கு தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட (10,000) யாத்ரீகர்களுக்கு இலவச உணவை மிஷன் வழங்கியது. மத விரிவுரைகள், சொற்பொழிவுகள் மற்றும் பஜனைகள் மடத்தில் வழக்கமான நடவடிக்கைகள் 1976 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் வரை மிஷன் ஒரு குடியுரிமை சுவாமியின் மேற்பார்வையின் கீழ் அதன் உன்னத சேவைகளைத் தொடர்ந்தது. 

அத்தகைய உன்னத ஜீவ சேவையாற்றிய இகிமிசன் மடத்தை மீண்டும் ஒப்படைத்து சமாதான பூமி புனித பூமி என்ற வாசகத்திற்கு அர்த்தம் சேர்க்குமாறு உலக இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்து கலாசார அமைச்சு திணைக்களம் அங்கு யாத்ரீகர்கள் விடுதியை அமைத்திருந்தாலும் அதிலும்  தென்பகுதி மக்களே முன் பதிவுகளை செய்து கொள்வதால், தமிழ் மக்கள் அங்கே வந்து தங்குவதற்கு இடம் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இந்து யாத்திரீகர் விடுதியில் பெரும்பாலும் உற்சவம் தொடங்கமுன்பே முன்பதிவுகள் பூர்த்தி அடைந்து விடும். அன்னதானம் நடப்பதால் அவர்களுக்கு பொது மண்டபங்கள் ஒதுக்கப்படுகின்றன
சிலவேளைகளில் பெரஹரா கலைஞர்கள் தங்குவார்கள்.

அதாவது இந்துக்கள் உணர்வோடு தங்க அங்கு இடமில்லை.

அன்று “கதிர்காம வாசலில் 'ஓம் முருகா' என தமிழில் வாசகம் காணப்பட்டது. ஆனால், தற்போது 'ஓம்' என்றை சொல்லி நீக்கிவிட்டார்கள். இன்றும் முகப்பில் ஓம் இல்லை.

 அதேபோன்று கதிர்காம கந்தன் மீது பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடப்பட்ட திருப்புகழை அங்கே பாடுவதை தற்போது நிறுத்திவிட்டார்கள். தமிழ் மக்கள் மலையேறுவதற்கு சென்றால், அங்கே இருக்கும் வாகன ஓட்டுநர்கள் கட்டுப்பாடற்ற முறையில், வாடகை பணம் வசூலிக்கின்றார்கள்.

“அகில இலங்கை இந்து மாமன்றம், யாத்திரிகர் மடத்தை அமைப்பதற்கு கதிர்காம ஆலய நிர்வாகம் காணியொன்றை வழங்க வேண்டும்.
, கதிர்காம கந்தனது அற்புதங்கள் பெருமைகள் ஆய்வுகள் தொடர்பான தமிழ் புத்தகங்களை அங்கே காட்சிப்படுத்த வேண்டும்.


ஆலயத்தின் வாசகங்களையும் அறிவித்தல்களையும் தமிழ் மொழியிலும் காட்சிப்படுத்த வேண்டும். இன்று அவை நடக்காமலில்லை. எனினும் போதுமானதாக இல்லை.

இதனை முன்னர் ஒரு தடவை தெல்லிப்பழை துர்கா தேவஸ்தானத்தின் தலைவர் ஆறுதிருமுகனும்  தெரிவித்திருந்தார்.அத்துடன், கதிர்காமத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாத்திரிகள் தங்குமிடம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான காணியை கதிர்காம ஆலய நிர்வாகம் வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் அக் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

இனசௌன்யம் நல்லிணக்கம் ஐக்கிய சமாதான பூமி பற்றி பேசுகின்ற அதேவேளை மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுக்க வேண்டும் என்பது இக் கட்டுரையின் நோக்கமாகும்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா 
காரைதீவு 

No comments