அதிசயம் ஆனால் உண்மை! இரு வருடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரம் இலவச இதய சிகிச்சைகள்!
(வி.ரி.சகாதேவராஜா)
100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவச 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு – ( 3000 Cardiac Interventions with more than 850 Stents)
மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை கேத் லேப் ஆரம்பிக்கப்பட்டு 02 வருடங்களே ஆன நிலையில் 15.07.2025 அன்று 3000 நோயாளிகளுக்கு முற்றிலும் இலவச இருதய சிகிச்சை ( Angiogram, PCI ) வழங்கியுள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் ஒரு நபருக்கு ரூபா 1 லட்ஷம் தொடக்கம் 10 லட்சங்கள் வரை கட்டணமாக அறவிடும் இச் செயற்பாட்டை எமக்காக முற்றிலும் இலவசமாக இவ் வைத்தியசாலை வழங்கி வருகின்றமை எம்மில் பலரும் அறியாத ஒரு விடயம்.
அது மட்டும் இன்றி கிழக்கு மாகாணத்தில் இந்த சேவையை வழங்கும் ஒரே ஒரு வைத்தியசாலை இதுவாகும். இங்கு அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதுடன் மிகவும் தரமான உயர்தரத்திலான உபகரணங்களை கொண்டே வைத்திய சேவை வழங்கப்படுகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருந்த சிகிச்சை குழுவின் பூரண பங்களிப்புடன் இருதய சிகிச்சை நிபுணர்களான Dr.வினோதன், Dr.அருள்நிதி, Dr.ரஜீவன் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இருதய சிகிச்சை நிபுணர் Dr.சந்துன் ஆகியோரது அர்ப்பணிப்பான சேவையும் போற்றுதலுக்குரியது.
2023.06.01 திகதி ஆரம்பிக்கப்பட்டு இச் சேவையானது 100 மில்லியனுக்கும் அதிக பணத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்கொடையாக பெற்று எமது பிரதே மக்களுக்கு இச்சேவையினை வழங்கி வருகின்றது.
இந்த நிறுவனம் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகையால் பல நல் உள்ளம் கொண்ட கொடையாளர்கள் நன்கொடை வழங்குகின்றார்கள்.
இவ் வைத்தியசாலையின் ஸ்தாபாகர் சுவாமி ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களின் ஆசிர்வாதமும், தலைவர் திருமதி. பென்னி ஜெயவர்தன அவர்களின் வழிநடத்தலிலும் பொது முகாமையாளர் திரு. டேவிட் அவர்கள் இவ் வைத்தியசாலையை மிக அழகாகவும் தரமாக சேவை வழங்கும் இடமாகவும் பேணி வருகின்றார் ” ஒரு உலகம் ஒரு குடும்பம்” என்னும் அவர்களது சிந்தனைக்கு அமைய எல்லாரும் நமது சொந்தங்கள் அவர்களிடம் நாங்கள் எங்கள் சேவைக்கு பணம் பெறுவது இல்லை என்று சொல்லி நம்மை ஆச்சரியத்தின் உச்சத்துக்கே எடுத்து செல்கிறார்கள் இங்கு கடமை புரியும் அனைத்து ஊழியர்களும்.
No comments