பேருந்து நிறுத்த நிழல்குடை பராமரிப்பின்றி காணப்படுவதால் பயணிகள் அசௌகரியம்
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் காணப்படும் பேருந்து நிறுத்த நிழற்குடை உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த நிழற்குடை நீண்ட காலமாக எவ்வித பராமரிப்பு இன்றியும் கூரை உட்பட அதன் இருக்கைகளும் சேதமடைந்து காணப்படுகிறது.
அன்றாடம் தமது அடிப்படை தேவைகளுக்காக இந்த பேருந்து நிழற்குடை உள்ள இடத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இவ்விடத்தினை பயன்படுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பிரதான வீதியில் அக்கரைப்பற்று கல்முனை பேருந்து வரும் வரை காத்திருக்கும் வேளைகளில் காகங்கள் மற்றும் இதர பறவைகளின் எச்சங்கள் விசப்பாம்புகளின் அச்சுறுத்தலும் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றதுடன் இன்று கூட இந்நிழற்குடையினை கால்நடைகளும் தங்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் பொதுமக்கள் குறித்த நிழற்குடை உள்ள இடத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளுவதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
தற்போது அதிக வெயில் காலம் என்பதனால் இதன் கூரைப்பகுதி மற்றும் நிழற்குடையின் சுற்றுச் சூழலை உடனடியாக திருத்தம் செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments