Vettri

Breaking News

காங்கேசன்துறை (கே.கே.எஸ்) சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பு!!




 வடமாகாணம் உட்பட முழுநாட்டினதும் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கமானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை (கே.கே.எஸ்) சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் அண்மையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்டு, நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

ஒரு காலகட்டத்தில் எமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பாரிய பங்களிப்புச் செய்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகள் 1990ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக ஸ்தம்பிதமடைந்தன. அப்போதைய காலகட்டத்தில் இந்தத் தொழிற்சாலையை நம்பி பெருமளவானோர் பணியாற்றினர். அவர்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக அமைந்திருந்தது.

இந்நிலையில், 35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதானது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், உட்கட்டமைப்பு மேம்பாடுகளை மேம்படுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கும், திறன் மேம்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் குறிப்பிடத்தக்க ஆற்றல்களை கொண்டுள்ளதாகவே கூற வேண்டும்.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் பட்சத்தில் உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்தில் கணிசமானளவு நன்மைகளை ஏற்படுத்துமென்று தினகரன் பத்திரிகைக்கு பொருளியல்துறை விரிவுரையாளர் கலாநிதி ஞானசுப்பிரமணியம் ஞானசந்திரன் சுட்டிக்காட்டினார்.

1990ஆம் ஆண்டு முதல் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஸ்தம்பித நிலையில் உள்ளது. இந்நிலையில் கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் பட்சத்தில் வடபகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முக்கிய வாய்ப்புகளை வழங்குவதுடன், மிக முக்கியமாக உடனடியான நன்மைகளில் ஒன்றாக நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். சீமெந்து உற்பத்தித் தொழிலை இலக்காகக் கொண்டுள்ள தொழில்களுக்கு திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். இதன் பயனாக நூற்றுக்கணக்கான தொழில்வாய்ப்புகள் உருவாகும். இது வடக்கு மாகாணத்தில் வேலையின்மை வீதத்தைக் குறைக்கும். இதனால் தொழில்நுட்ப பயிற்சி முயற்சிகள், உபகரண பராமரிப்பு, தரக்கட்டுப்பாடு, தொழில்துறை பாதுகாப்பு போன்றவற்றில் பணியாளர்கள் நேரடி அனுபவத்தைப் பெறுவார்கள்.தொழிற்சாலையின் செயற்பாடுகளுக்கு மூலப்பொருட்கள், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் விநியோக வலையமைப்புகளுக்கான விநியோகச் சங்கிலி (Supply chain) அவசியமாகும். வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் இந்த எழுச்சி, உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கான வணிகத்தை உருவாக்குவதன் மூலம் பிராந்திய பொருளாதாரத்தை தூண்டும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (Small Medium Enterprises (MSEs) உபகரண வழங்குநர்கள், பொதியிடும் நிறுவனங்கள், கட்டுமான வணிகங்கள் உள்ளிட்ட துணைத் தொழில்கள் செழித்து வளரும். இந்த சீமெந்து தொழிற்சாலைக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் புதிய வாய்ப்புகள் கண்டறியப்பட்டு பொருளாதார மறுமலர்ச்சியை மேலும் மேம்படுத்தும். இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் கணிசமானளவு வரி வருவாயை ஈட்ட முடியுமென்பதுடன், நலன்புரித் திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கான பொதுநிதிக்கு பங்களிப்புச் செய்ய முடியுமெனவும் கலாநிதி ஞானசுப்பிரமணியம் ஞானசந்திரன் தெரிவித்தார்.

கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து கிடைக்கும் பட்சத்தில் இலங்கையின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியுமென்பதுடன், இது சீமெந்து கட்டுமானத்துக்கும் ஒரு முக்கிய அங்கமாகும். மேலும் அதிகரித்த உள்ளூர் விநியோகத்தினூடாக பல நன்மைகள் உள்ளூர் கட்டுமானத்துக்கு கிடைக்கலாம்.

தற்போது எமது நாடானது உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய சீமெந்து இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது. உள்நாட்டில் சீமெந்து உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதி செலவினத்தை குறைக்கவும் நாட்டின் வர்த்தக சமநிலையை மேம்படுத்தவும் அந்நிய செலாவணி இருப்பை பாதுகாக்கவும் உதவும். மேலும் நிலையான உள்ளூர் சீமெந்து விநியோகத்துடன், தளபாடச் செலவினம் குறைவதினால் கட்டுமானச் செலவு குறையக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த மலிவு விலை வீட்டு வசதி, வணிக சொத்துக்கள் மற்றும் பொது உட்கட்டமைப்பு திட்டங்களில் வளர்ச்சியை தூண்டக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குமென்பதுடன், உட்கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சியின் ஒரு மூலக்கல்லாகும்.மேலும் நெடுஞ்சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் மற்றும் பொதுவசதிகள் போன்ற திட்டங்களுக்கு நம்பகமான சீமெந்து விநியோகம் மிக முக்கியமானது. ஆகையால் கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையின் இத்தகைய முயற்சியை விரைவுபடுத்துவது மிக முக்கியமானதாகும். அத்துடன் அருகிலுள்ள காங்கேசன்துறை துறைமுகம் இந்திய நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையின் இந்த மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதியை பயன்படுத்தி அதன் விநியோக நடவடிக்கைகளை உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் விரிவுபடுத்த முடியும்.

மேலும் வடக்கு மாகாணம் உள்நாட்டு யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இதன் விளைவாக பொருளாதார சரிவு மற்றும் சமூக உறுதியற்ற தன்மை ஏற்பட்டது. ஆகையால் கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் பட்சத்தில் அது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பல வழிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கும். யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் சமூக காயங்களை குணப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மிக முக்கியமானது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதானது மிகவும் தேவையான பொருளாதார ஊக்கத்தை வழங்குமென்பதுடன், ஏழ்மை நிலையைக் குறைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.

வடக்கு மாகாணத்தை இலங்கையின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் மெதுவான பொருளாதார வளர்ச்சியையே அது கண்டு வந்துள்ளது. இந்நிலையில் ஒரு செழிப்பான சீமெந்து தொழிற்சாலையை மையப்படுத்தி தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் அப்பகுதியில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதிகரித்த தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் நிலைமை, வருமான வளர்ச்சி உள்ளூர் மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான மேம்பட்ட அணுகலுக்கு வழிவகுக்கும். இந்த சமூக நன்மைகள் பிராந்தியத்தில் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை வளர்க்கும்.

எனவே கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அது எமது நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சக்தி வாய்ந்த வாய்ப்பை வழங்கும். இந்த திட்டத்தை ஒரு மூலோபாய ரீதியாகப் பயன்படுத்துவதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கவும் வடக்கு மாகாணத்தில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் முடியும். பொருளாதார நம்பகத்தன்மை ஏற்படுமெனவும் கலாநிதி ஞானசுப்பிரமணியம் ஞானசந்திரன் மேலும் தெரிவித்தார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இந்தத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் எமது நாட்டுக்கு பல நன்மைகள் கிடைக்குமென்பது உறுதியாகும்.


No comments