Vettri

Breaking News

நிரந்தரமான அரசியல் தீர்வு என்கிற எமது இலக்கிற்கு வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் ஆணையளித்துள்ளனர் - சாணக்கியன்




 


நிரந்தரமான அரசியல் தீர்வு என்கிற எமது இலக்கிற்கு வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் ஆணையளித்துள்ளனர் - சாணக்கியன்


நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று (7) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் கூறுகையில், 


2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியானது வடக்கு, கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. 


நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைய வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள். இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்துக்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழ் அரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 


நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள்.


அந்த வகையில் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கிறோம்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம்.


இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதற்கட்டமாக பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாடவுள்ளோம். 


நாளைய தினம் நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து, அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர், பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாடவுள்ளோம். 


எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கிறோம் என்றார்.

No comments