தமிழர்கள் திசைகாட்டிக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் இருப்பை இழந்து திசைமாறிய பறவைகளாய் அலைய நேரிடும்! இறுதி கூட்டத்தில் தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில் காட்டம்.
( வி.ரி.சகாதேவராஜா)
திசைகாட்டிக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் இருப்பை இழந்து திசைமாறிய பறவைகளாய் எங்கேயோ அலையவேண்டி நேரிடும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள் தவிசாளரும், இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இறுதி பிரச்சாரக் கூட்டம் காரைதீவில் அவரது வட்டாரத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.
அங்கு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
கருணா பிள்ளையான் போல் தேர்தலுக்கு பிறகு திசைகாட்டியும் சிதறி இருந்த இடம் தெரியாமல் திசை மாறும். அவர்களை எமது பகுதியில் காணமுடியாது.எனவே அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும் என்றார்.
வேட்பாளர் கி.ஜெயசிறில் மேலும் தெரிவிக்கையில்
தொடர்ச்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றி வருகின்றது. இம்முறையும் இலங்கை தமிழரசுக் கட்சியே காரைதீவு பிரதேச சபையில் ஆட்சி அமைக்கும். அதில் உணர்வுள்ள தமிழர்கள் நூறு வீதம் உறுதியாக உள்ளனர்.
நான்கு வட்டங்களையும் உங்கள் தமிழரசுக் கட்சியே ஆட்சி அமைக்கும். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எமது மக்களை எமது மக்கள்தான் ஆள வேண்டும். எமது மண்ணை மாற்றானுக்கு தாரை வார்க்க முடியாது.
எமது மண்ணை மாற்றானிடம் தாரை வார்க்க இன்று மதியில்லாத சில கோடரிக் காம்புகள் தலைப்பட்டுள்ளனர். மருந்துக்கும் பொதுச் சேவை சமூக சேவை செய்யாதவர்கள் இவர்கள். மாற்றமாம்! அபிவிருத்தியாம்!
இதை நம்பி வாக்களிக்க தன்மானமுள்ள காரைதீவுத்தமிழன் ஒன்றும் கேணயன் அல்ல.
அவர்களது வரலாற்றை நாம் நன்கறிவோம். இந்த நாட்டில் தமிழன் இன்று உரிமையற்று வடகிழக்கு பிரிக்கப்பட்டு நாதியற்ற சமூகமாக மாறுவதற்கு மூலவிசையாக செயற்பட்டவர்கள் இந்த சிவப்பு அணியினரே.
எந்த மானமுள்ள ரோசமுள்ள தமிழனும் இதற்குப் பின்னால் போக மாட்டான்.
இந்த மண்ணை அபகரிக்க பயன்படுத்தப்படும் ஏவல் பேய்களே இன்றைய பெரும்பான்மைக்கட்சி வேட்பாளர்கள்.
தேர்தலுக்கு பின்னர் இவர்கள் தலைமறைவாகி விடுவார்கள்.
புரியாதவர்கள் புரிந்து கொள்வதற்கு, புத்தியும் மதியும் இல்லாதவர்களுக்கு புத்திமதி
தேர்தல்கள் பலவிதம். ஜனாதிபதி தேர்தல் வேறு. உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேறு. அது தேசத்திற்கானது. இது பிரதேசத்திற்கானது. அதில் பெரும்பான்மை சிங்களவர். இதில் பெரும்பான்மை தமிழர்கள். அது நாம் ஆளப்படுவதற்கானது. இது நாம் நம்மை ஆளுவதற்கானது. அது தேசத்தை காப்பதற்கானது. இது நம் மண்ணைக் காப்பதற்கானது. அது பல்லினம் சார்ந்தது. இது இரு இனங்கள் சார்ந்தது. அது பரந்தபட்ட அபிவிருத்திக்கானது. இது மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கானது. அதில் எமது தன்மானம் அழிக்கப்படும். இதில் நம் தன்மானம் காக்கப்படும். அன்று சாதகமான மாற்றத்தை விரும்பினோம். இன்று பாதகமான மாற்றத்தை தவிர்ப்போம்.
கண் போன போக்கிலே கால் போகலாமா. கால் போன போக்கிலே மனம் போகலாமா. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா. மாமனிதன் போன பாதையை மறந்து போகலாமா. நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும். நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும். உனைப்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும். உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும். பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம். புரியாத பல பேர்க்கு இது நாகரீகம். முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம். முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
மக்களே! பெயர்கள் இரண்டு. முகங்கள் ஒன்று. கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது நீங்கள் அளித்த பொன்னான வாக்குகள் தான் இன்றுவரை உங்கள் நிரந்தர இருப்பை தக்கவைத்துள்ளது. இதை உணராமல், தவறாக நீங்கள் வாக்களித்தால், எதிர்காலத்தில் திசைமாறிய பறவைகளாய் எங்கேயோ வாழ நேரிடும்.
வாக்குரிமை உங்களின் சுதந்திரம். நீங்கள் இடும் புள்ளடியே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். எனவே, ஆழ சிந்தித்து வாழ வாக்களியுங்கள்.
இராமன் ஆண்டால் என்ன.? இராவணன் ஆண்டால் என்ன. ?கூட வந்த குரங்குதான் ஆண்டால் என்ன? ஆனால் இந்த மண்ணை தன்மானத்தமிழன் ஆழ வேண்டும். அதற்கு ஆணை வழங்குங்கள்.
என்றார்.
ஏனைய வேட்பாளர்களும் உரையாற்றினர்.
No comments