வடக்கு, கிழக்கு காணி விவகார வர்த்தமானி : பதிலளிக்க அமைச்சர் பிமல் ஒரு வாரகால அவகாசம் கோரினார்
வடக்கு, கிழக்கு காணி விவகார வர்த்தமானி : பதிலளிக்க அமைச்சர் பிமல் ஒரு வாரகால அவகாசம் கோரினார்
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரிப்பதற்காக 2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் நோக்கம் என்னவென பதிலளிப்பதற்கு அரசாங்கம் ஒரு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று (08) தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் 27இன் கீழ் 2 இல் முன்வைத்த விசேட கூற்றொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க இந்த கால அவகாசத்தை கோரினார்.
இது தொடர்பாக சிறிதரன் எம்.பி. நேற்று சபையில் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் பலவற்றில் இப்போதும் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் இராணுவத்தினர் வசமே பெரும்பாலான காணிகள் உள்ளன. வடக்கு, கிழக்கைப் பொருத்தவரை அங்குள்ள மக்கள் இப்போதும் அகதிகளாக தனியார் வீடுகளிலும் முகாம்களிலும் வாழ்கின்றார்கள். இவ்வாறு தமது சொந்தக் காணிகள், வளங்களை விட்டு விட்டு மக்கள் அகதிகளாக முகாம்களில் வாழும் நிலையிலேயே, நான் கமத்தொழில், கால் நடை மற்றும் காணி அமைச்சர் லால்காந்தவிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றேன். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரிப்பதற்காக 2025 .03.28 ஆம் திகதி 24/30 ஆம் இலக்க வர்த்தமானி முன்னறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா?
மேற்படி வர்த்தமானி, அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காக கோரப்பட்டுள்ளன என்பதையும், 5,700 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாக சுவீகரிக்க காரணம் என்ன என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்ட கால யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் வாழும் நிலையில் அவர்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் நோக்கம் என்ன என்பதையும் அமைச்சர் அறிவிக்க வேண்டும்.நீண்டகால யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோரமுடியும்? என்பதனை அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிப்பாரா? என கேள்வி எழுப்பினார்.இதன்போதே, இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவார கால அவகாசம் கோருவதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க சிறீதரன் எம்.பிக்குப் பதிலளித்தார்.
No comments