தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் விரைவில் அதிகரிக்கப்படும்- தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க சட்ட நடவடிக்கை
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் விரைவில் அதிகரிக்கப்படும்- தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க சட்ட நடவடிக்கை
பெருந்தோட்டத் தொழிலானர்களின் நாளாந்த சம்பளத்தை விரைவில் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (08) நடைபெற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, இழுபறி நிலையிலிருந்து வரும் பெருந்தோட்டத் தொழிலானர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு குறித்து ஊடகவியலாளர்களால் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. மேலும், தமக்கான நாட் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளதை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாக சிலர் குறிப்பிடுவதையும் ஊடகவியலாளரினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கேள்வி: பெருந்தோட்ட மக்கள் தமது நாளாந்த சம்பளத்தில் கோரும் 350 ரூபாவைக்கூட தோட்ட கம்பனிகள் சில வழங்க முடியாது என திட்டமாக நிராகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமா?
அமைச்சர்: இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
கேள்வி: புதிய பேச்சுவார்த்தையா தற்போது நடைபெறுகிறதா ?
அமைச்சர்: தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. அவர்களின் சம்பளப் பிரச்சினை அரசாங்கத்தினால் தீர்க்கப்படும். அத்துடன், அம்மக்களின் நலன் குறித்தும் முக்கியத்தும் வழங்கி அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
இதேவேளை, தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிப்பதற்குரிய 2005 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்கச் சட்டம், 2016 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க வேலையாளர்களின் வரவு செலவுத் திட்ட நிவாரணப்படிச் சட்டம் 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2025.04.07 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, குறித்த சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்டவரைஞரால் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று முன்தினம் (07) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
No comments