தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா!
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 2025.05.03 மற்றும் 2025.05.04 ஆம் திகதிகளில் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் தலைமையிலும் வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையிலும் இடம்பெறும், இரண்டு நாட்களைக் கொண்ட குறித்த ஆறு அமர்வுகளைக்கொண்ட பட்டமளிப்பு விழாவில் 2077 மாணவர்கள் தங்களது பட்டங்களைப்பெற்று வெளியேறவுள்ளனர்.
நடைபெறவுள்ள ஒவ்வொரு அமர்விலும், முன்னணி அறிவியல்சார் நிபுணர் ஒருவர், முக்கிய உரையை ஆற்றவுள்ளனர். இதில் முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ யசந்த கொட்டகொடவும் இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி சீதா பி பண்டாரவும் மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் மாண்புமிகு காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இரண்டாம் நாள் முதல் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல் வசந்த குமாரவும் இரண்டாம் அமர்வில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்கவும் மூன்றாவது அமர்வில் யாழ் பலகலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ. வேல்நம்பியும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இடம்பெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து 172 மாணவர்களும் பொறியியல் பீடத்திலிருந்து 82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் (FAC & FMC) 687 மாணவர்களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments