Column Left

Vettri

Breaking News

இன்று முதல் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி!!




 நாட்டில் இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டு வந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று (01) முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது. எவ்வாறாயினும், அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களுக்கான விலை, போக்குவரத்து, தொலைபேசி சேவை உட்பட பல சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் லலித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் வற் வரி திருத்தம் காரணமாக பேருந்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டியேற்படும் எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

அதேநேரம், இன்று முதல் சோற்றுப்பொதி, கொத்துரொட்டி, தேநீர், பால் தேநீர் ஆகியவற்றுக்கான விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி | Vat On 97 Goods And Services From Today In Sl

இதன்படி, சோற்றுப்பொதி, ப்ரைட் ரைஸ், கொத்துரொட்டி உள்ளிட்ட உணவுகளில் விலையை 25 ரூபாவினாலும், தேநீரின் விலையை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், இன்று முதல் நீர் கட்டணமும் 3 சதவீதத்தால் அதிகரிக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், பிரதான தொலைபேசி சேவை வழங்குநர்களும் வரி திருத்தத்தின்படி அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனினும், இதுவரை வற் வரியிலிருந்து விலக்களிப்பட்டுவந்த 41 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்தும் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments