Vettri

Breaking News

பந்துவீச்சில் ஹசரங்க சாதனை, துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி; தொடர் இலங்கை வசம்




 ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.

வனிந்து ஹசரங்கவின் தனிப்பட்ட சாதனை மிகு பந்தவீச்சுப் பெறுதியும் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி அரைச் சதமும் இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

ஆறு மாதங்களின் பின்னரே  சுழல்பந்துவீச்சாளர்   வனிந்து ஹசரங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

ஸிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்களை பெரும் சோதனைக்குள்ளாக்கிய வனிந்து ஹசரங்க தனது மீள் வருகையில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 5.5 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது வனிந்து ஹசரங்கவின் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். சமிந்த வாஸுக்கு அடுத்ததாக இலங்கையர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.

ஸிம்பாப்வேக்கு எதிராக எஸ்எஸ்சி மைதானத்தில் 2001 டிசம்பரில் நடைபெற்ற போட்டியில் சமிந்த வாஸ் 19 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தியமையே அனைத்து நாடுகளுக்குமான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக கடந்த 21 வருடங்களாக இருந்துவருகிறது.

பல தடவைகள் மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடரப்பட்ட இப் போட்டி அணிக்கு 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட நேரப்படி ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 22.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பிற்பகல் 3.04 மணிக்கு மழையினால் ஆட்டம் தடைப்பட்டபோது ஸிம்பாப்வே 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பிற்பகல் 5.15 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் ஆட்டம் நெடு நேரம் தொடரவில்லை. பிற்பகல் 5.34 மணிக்கு மீண்டும் மழை பெய்ததால் போட்டி இரண்டாவது தடவையாக தடைப்பட்டது. (ஸிம்பாப்வே 12 ஓவர்களில் 48 - 3 விக்.)

ஆட்டம் மீண்டும் இரவு 8.00 மணிக்கு தொடர்ந்தபோது அணிக்கு 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றபோது இலங்கையர்களின் குறிப்பாக வனிந்து  ஹசரங்கவின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட ஸிம்பாப்வே 96 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் ஜோய்போர்ட் கம்பி (29), டக்குட்ஸ்வனாஷே கய்ட்டானோ (17), சிக்கந்தர் ராஸா (10), லூக் ஜொங்வே (14), வெலிங்டன் மஸக்கட்ஸா (11) ஆகிய ஐவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 97 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முதலிரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய அவிஷ்க பெர்னாண்டோவுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டபோதிலும் அவர் இத் தொடரில் இரண்டாவது தடவையாக ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

எனினும் ஆரம்ப வீரராக அறிமுகமான ஷெவன் டெனியல் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அவர் 12 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 51 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். சதீர சமரவிக்ரம 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இந்தப் போட்டியில் வனிந்து ஹசரங்க விளையாடியதால் தசுன் ஷானக்க நீக்கப்பட்டார். ஜெவ்றி வெண்டசெயுக்குப் பதிலாக ஷெவன் டெனியல் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆட்டநாயகன்: வனிந்து ஹசரங்க

No comments