----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Thursday, September 7, 2023

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

 உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும்  உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன். உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட பரமஹம்ச ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை X தளத்தில் பதிவிட்ட ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் சார்பில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இருவர் மீதும் 153, 153A (1) (a), 504, 505(1)(b), 505(2) & 506(ii) IPC 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, கலகத்தை விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், ஒற்றுமைக்கு குந்தகமாக செயல்படுதல், அமைதியின்மையை வேண்டுமென்றே ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், தீய எண்ணத்தை உருவாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல் சாமியாரின் டுவிட்டர் கணக்கை கையாளும் பியூஸ் ராய் என்பவர் மீதும் அதே 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive