Vettri

Breaking News

போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பான நிறுவனங்களை அழைப்பதற்குத் தீர்மானம்!!




போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான முதற்கட்டமாக அது தொடர்பான நாட்டின் தற்போதைய நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியமானது என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு 'நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில்' தீர்மானிக்கப்பட்டது. அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் நேற்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய, இலங்கை பொலிஸ், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான அதிகார சபை ஆகிய நிறுவனங்களை குழு முன்னிலையில் அழைத்து இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தற்போதைய நிலைமையை கண்டறிவது அவசியமானது என குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தெரிவித்தார். அதற்கமைய, அந்த நிறுவனங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான மூலோபாயத் திட்டம் மற்றும் அது தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி மற்றும் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் (பதில்) பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வாவும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

No comments