Column Left

Vettri

Breaking News

லண்டனில் 'we Remember 2026' கண்காட்சி:தாய்நிலத்தில் உயிர்நீத்த உறவுகளின் வரலாறு




 உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் லண்டனின் ஓல்ட் ஸ்ட்ரீட் (old street) பகுதியில்  "we Remember 2026" எனும் கருப்பொருளில் மூன்று நாட்கள் நினைவேந்தல் கண்காட்சி மற்றும் பயிலரங்கு நடைபெறவுள்ளது.



தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாக இம் மாதம் நினைவுகூரப்படுவதாலும் வரலாற்றைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கிலும் இந்த கண்காட்சி இடம்பெறும்.

இக் கண்காட்சியானது எதிர்வரும் இம்மாதம் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

தாய்நிலத்தில் உயிர்நீத்த மகத்தான மனிதர்களின் நினைவாக அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் உரித்துடையோர் பேணிக்காத்த அவர்களின் நினைவுப் பொருட்களின் வழியாகச் சொல்லப்படாத வரலாற்றுக் கதைகளையும், ஆயிரம் ஆயிரம் பெயர்களையும் தாங்கி இக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

"வரலாறு எனது வழிகாட்டி" என்ற வாக்கிற்கிணங்க, நினைவேந்தல் என்பது வெறும் கடந்த காலத்தின் நினைவுகளைத் தாங்கி நிற்பதல்ல. அது ஒரு சமூகத்தின் வரலாற்றையும், அடையாளத்தையும், எமக்கானவற்றையும் எடுத்துரைப்பதாகும்.

இவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் அவசியத்தை உணர்ந்து இக்கண்காட்சி மற்றும் பயிலரங்கு நடாத்தப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்களான பிரித்தானியத் தமிழ் கூட்டணி தெரிவிக்கின்றது.

இக்கண்காட்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்கள் முன்கூட்டியே இணையவழியில் பதிவு செய்வது அவசியமாகும்.

நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு, வரலாற்றையும் நினைவுகளையும் எதிர்காலத் தலைமுறைக்காகப் பாதுகாக்கும் முயற்சியில் இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


“நினைவுகளை உயிர்ப்புடன் பேணுவோம்; வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம்” என்ற செய்தியுடன் இந்நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us