Column Left

Vettri

Breaking News

போதையற்ற இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘Miandad Sports Academy’ ஆரம்பம் : விளையாட்டின் ஊடாக இளைஞர்களை ஒன்றிணைக்கும் புதிய முயற்சி !




 போதையற்ற இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘Miandad Sports Academy’ ஆரம்பம் : விளையாட்டின் ஊடாக இளைஞர்களை ஒன்றிணைக்கும் புதிய முயற்சி !


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேசத்தில் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதுடன், போதைப்பொருள் பாவனையற்ற ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘மியண்டாட் ஸ்போர்ட்ஸ் அகடமி’ எனும் புதிய விளையாட்டு அமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.


“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படும் இவ்விளையாட்டு அமைப்பின் முதற்கட்ட நிகழ்வாக, மாணவர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களுடனான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 2026 நவம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.


இளைஞர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்ப்பதுடன், அவர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை முறையாக ஊக்குவித்து எதிர்கால விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாகும்.


இதற்கமைய, கிரிக்கெட், கால்பந்து, சதுரங்கம், கபடி, எல்லே, கரப்பந்து, கடற்கரை கரப்பந்து, கராத்தே, த்ரோபோல், பூப்பந்து, கரம் மற்றும் தடகள விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத் துறைகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.


விளையாட்டு என்பது வெறுமனே பொழுதுபோக்கிற்கான ஒன்றல்ல. அது இளைஞர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, தலைமைத்துவப் பண்பு, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற நற்பண்புகளை வளர்க்கும் முக்கியமானதொரு ஊடகமாகும்.


குறிப்பாக, போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாத்து, அவர்களின் ஆற்றல்களை ஆக்கபூர்வமான வழிகளில் வழிநடத்துவதற்கு இவ்வாறான விளையாட்டு அமைப்புகள் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே, சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இவ்வாரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு, இந்தப் புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு: ஜஹான் – 0774029258, முர்சித் – 0772633281, ஜவாஹிர் – 0750624898 ஆகியோரை தொடர்பு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

No comments

Subscribe Us