சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் மூன்றாவது இரத்ததான நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுப்பு! நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் இரத்ததானம் !
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் மூன்றாவது இரத்ததான நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுப்பு! நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் இரத்ததானம் !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையினால் “உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை (14) வெற்றிகரமாக நடைபெற்றது.
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில், அதன் தலைவர் எஸ்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர் டாக்டர் ஜே. நிரோஜனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலர் மிகுந்த ஆர்வத்துடன் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இரத்ததான நிகழ்வின் மூலம் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் நிலவிய இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடிந்துள்ளதாக, அப்பிரிவின் வைத்தியர் டாக்டர் கே. வித்தியா தெரிவித்தார்.
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சமூகநலப் பணிகளின் தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாகவும் இவ்விரத்ததான நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஸூரா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ரஃபி, ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் பொதுச் செயலாளர் யூ.கே. காலித்தீன், பொருளாளர் ஏ.எச். முர்சித், முன்னாள் தலைவர் ஏ.எஸ். அஸ்வர், ஸூரா சபை உறுப்பினர்கள், பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் பேரவையின் முதுகெலும்பாகச் செயற்படும் களப்பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, பேரவையின் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று இரத்ததானம் செய்யக்கூடிய நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை நிகழ்வுக்கு அழைத்து வந்தமை இப்பணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தது.
உயிர்காக்கும் உன்னதமான மனிதநேயப் பணியில் இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து, வைத்தியசாலையின் இரத்தத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள இம்முயற்சி பிரதேச மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

No comments